Published:Updated:

``திடீர்னு ஒரு சத்தம்... கண் முழிச்சுப் பார்த்தா..?" சோமனூர் மேற்கூரை விபத்தின் ஒரு வருடம்!

``திடீர்னு ஒரு சத்தம்... கண் முழிச்சுப் பார்த்தா..?" சோமனூர் மேற்கூரை விபத்தின் ஒரு வருடம்!
``திடீர்னு ஒரு சத்தம்... கண் முழிச்சுப் பார்த்தா..?" சோமனூர் மேற்கூரை விபத்தின் ஒரு வருடம்!

``திடீர்னு ஒரு சத்தம்... கண் முழிச்சுப் பார்த்தா..?" சோமனூர் மேற்கூரை விபத்தின் ஒரு வருடம்!

``என் பேரு முரளி... டெய்லர் வேலைக்குப் போறேங்க. அப்போதான் வேலையிலிருந்து வந்து பஸ் ஸ்டாண்டுக்குள்ள போனேங்க. திடீர்னு ஒரு சத்தம் கேட்டுச்சு. இரண்டு நாள் கழிச்சு கண் முழிச்சு பார்த்தா கோயம்புத்தூர் பெரிய ஆஸ்பத்திரியில் இருந்தேனுங்க, கால்ல கட்டு போட்டுருந்துச்சு. 'முழங்கால் எலும்பு உடைஞ்சுருக்கு, இனி நீங்க கைத்தடி வச்சுதான் நடக்கணும்'னு டாக்டர் சொல்லிட்டாங்க. நாலு நாள் கழிச்சு பெரிய அதிகாரியெல்லாம் வந்தாங்க. காயமடைஞ்சவங்களுக்கு எல்லாம் 50,000 கொடுத்தாங்க. ஆனா, மருத்துவ செலவு மட்டும் ஒன்றரை லட்சம் கடந்துருச்சு. எனக்கு 9 வயசுல ஒரு பையன் இருக்கான். வாடகை வீட்டுலதான் இருக்கோம். நான் வேலைக்குப் போனாதான் எங்க ஊட்ல அடுப்பு எரியும். இதுக்கு முன்னாடி 700 ரூபாய் சம்பளம் வாங்கிட்டு இருந்தேன். இப்போ 400 ரூபாய் வாங்குறேன். சம்பளம் எல்லாமே மருந்து, மாத்திரைக்கு செலவாயிடும். வட்டிக்கு வாங்கித்தான் ஆபரேஷன் பண்ணிருக்கேன். அதுக்கும் வட்டி கட்ட வேண்டியதா இருக்கு. அதிக நிவாரண நிதி கேட்டு கோவை கலெக்டர் ஆபீஸ்ல மனு கொடுத்தோம். ஆனா பதில் ஏதும் இல்லீங்க" எனக் கண்ணீர் மல்க சொல்கிறார் அவர். 

கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி கோவையின் கறுப்பு நாள். தமிழகத்தையே உலுக்கிய நிகழ்வு அது. கோவையின் முக்கியப் பேருந்து நிலையங்களுள் ஒன்றான சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை திடீரென இடிந்து விழ, ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 18 பேர் படுகாயம் அடைந்தனர். வழக்கம்போல அதில் பலியானவர்களுக்கு தலா நான்கு லட்ச ரூபாயும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் காயம் அடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் நிவாரணத் தொகையாக அறிவித்துவிட்டு, எப்போதும் போல 'இரங்கலுக்கு வருந்துகிறோம்' என்று கூறிவிட்டுக் கிளம்பியது அரசு இயந்திரம். இதில் ஒரு பெரிய விஷயம், கோவை மாவட்டத்துக்காரரும் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, 'ரிச்மண்ட் மருத்துவமனை'க்கு நேரில் சென்று, 'மருத்துவச் செலவு எல்லாம் நம்ம அம்மா அரசு பாத்துக்கும். நீங்க கவலைப்படத் தேவையில்லை' எனக் கூறிவிட்டு கிளம்பியிருக்கிறார். ஆனால், மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, `பணம் எதுவும் கட்டல. நீங்கதான் கட்டணும்'னு சொல்ல உறைந்துபோனார்கள் பாதிக்கப்பட்டோர். 

``என் பேரு லதா. நான் தனியார் கல்லூரியில படிச்சுட்டு இருந்தேங்க. சம்பவம் நடந்த அன்னைக்கு தேர்வு எழுதிட்டு, ஃப்ரண்ட்ஸ்கூட சோமனூர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அப்போதான் அந்தச் சம்பவம் நடந்துபோச்சு. என்னோட ஒரு கால் எடுத்துட்டாங்க. வலது கால்ல பிளேட் வச்சு ஆபரேஷன் பண்ணிருக்காங்க.10 லட்சம் முதல் 12 லட்சம் வரை செலவாகியிருக்கு. இதுல எங்க காலேஜ் நிர்வாகமும் என்கூட படிக்கிற பசங்க எல்லோரும் சேர்ந்து ஹெல்ப் பண்ணாங்க. எப்படியோ படிப்பை முடிச்சுட்டேன். ஆனா என்னங்க பண்ணுறது, சாதிக்க வேண்டிய வயசுல வீட்ல இருக்க வேண்டிய நிலைமை வந்துடுச்சே. அம்மா, அப்பா இரண்டு பேருமே தறி நெசவுத் தொழில் செய்யுறவங்க. மாச மாசம் மருத்துவச் செலவு மட்டும் 5,000 முதல் 6,000 வரை ஆயிடும். பல கனவுகளோட இருந்தேன். ஒரு நல்ல வேலைக்குப் போய் அம்மா, அப்பாவை நல்லா வச்சு பார்த்துக்கணும்னு நினைச்ச என்னை சப்போர்ட்டுக்கு ஒரு ஸ்டிக் கொடுத்து நிக்க வச்சுட்டாங்க. 

அரசு கொடுத்த நிதி எதுக்குமே பத்தலையே. எங்க மருத்துவச் செலவை ஏத்துக்கச் சொல்லி கலெக்டரிடம் மனு கொடுத்தோம். 'ஒரு மாசத்துல சொல்றோம்'னு சொன்னாங்க. ஆனா, மூணு மாசம் ஆச்சு... ஒரு பதிலும் இல்ல" என்றார்.

மேற்கூரை இடிந்து விழுந்தபோது பணியில் இருந்த நடத்துநர் ஒருவர் இக்கோர விபத்தில் பலியானார். இறந்தவரின் நண்பர் கூறுகையில், "கல்யாணம் ஆகி இரண்டு வருஷம்தான் ஆச்சு அவருக்கு. கைக்குழந்தையும் இருக்கு. அந்த விபத்து நடக்குறதுக்கு முன்னாடிகூட என்கிட்ட நல்லா பேசிட்டு இருந்தாரு. மேற்கூரை இடிஞ்சு விழுறதுக்கு முன்னாடி, 'அங்க யாரும் நிற்காதீங்க. ஆபத்தான இடம்'னு சொல்லியிருக்காரு. பஸ் ஸ்டாண்டுல நின்னுட்டு இருந்த ஒரு பொண்ண காப்பாத்தப் போயி இவரு பொணமா வந்தாரு" என ஆழ்ந்த வருத்தத்துடன் என்னிடம் பகிர்ந்துகொண்டார். 

"மேற்கூரை இடிந்ததற்கு முக்கியக் காரணம் அதிகாரிகளின் அலட்சியப் போக்கு மட்டுமே. அக்கட்டடம் தரமில்லாமல் கட்டப்பட்டிருக்கிறது. இங்கு இயங்கும் அலுவலகத்தை வேறெங்கும் மாற்ற முடியாமல் இடிந்த கட்டடத்தின் கீழே செயல்படுவதும், அங்கு பயணிகள் காத்திருப்பதும் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது" என்கிறார்கள் அங்குள்ளவர்கள்.

'சோமனூர் பேருந்து நிலையம் 29,994.78 சதுர அடி கொண்டது. IUDP திட்டத்தில் 1997-1998-ல் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்டது' என அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரபாகரன் என்ற பயணி கூறுகையில், "கோவையின் பல கிராமங்களுக்குச் செல்ல இங்கு வந்துதான் பஸ் ஏற வேண்டும். மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு வருஷம் ஆகிறது. இரண்டு முறை ஆய்வு செய்தார்கள். மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்பித்தார். நிவாரணத்தொகை குறித்து அவரும் உறுதியளித்தார். அதிகாரி பேச்சும், அரசியல்வாதி பேச்சும் காற்றோடு போய்விட்டது. இன்னும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போதைய பேருந்து நிலைய நிலைமை எப்படி இருக்கிறது தெரியுமா? இடிந்த கட்டடத்திலேயே பணி செய்கிறார்கள். அவ்வளவு ஆபத்து இருந்தும் பயணிகள் அங்கு நின்றுதான் பஸ் ஏறுகிறார்கள். முதியோர்கள் எல்லாம் வெயிலில் உட்கார்ந்திருக்கிறார்கள். பேருந்துகள் அதிக நெருக்கடியில் நிறுத்திவைக்கப்படுகின்றன. பயணிகளோ, பாதுகாப்பு அற்ற நிலையிலதான் தினமும் பயணமும் செய்கிறார்கள். இந்நிலை எப்போது மாறுமோ?" என்றார்.

பேருந்து நிலையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் வந்ததையடுத்து, விவரம் கேட்பதற்காக EO கதிரவமூர்த்தி அவர்களைத் தொடர்புகொண்டோம். ஆனால் அவர், "போனில் எந்தத் தகவலும் தர முடியாது. நீங்க மிஸ்யூஸ் பண்ண வாய்ப்பிருக்கு. ஆபீஸ் வாங்க பார்த்துக்கலாம்" என்று கூறிவிட்டு கட் செய்தார். இரண்டு நாள்கள் முன் அவரை சந்திப்பதற்கு அவரது அலுவலகம் சென்றோம். அவர் இல்லாத காரணத்தால் மீண்டும் போனில் தொடர்புகொண்டோம். "நீங்க எல்லா டீட்டெய்லும் ஆபீஸ்ல வாங்கிக்கோங்க" எனக் கூறிவிட்டார். அவரது அலுவலத்தில் கேட்டபோது பழைய எஸ்டிமேட் கொடுத்தார்கள். புதிய கட்டடம் தொடர்பான எஸ்டிமேட் கேட்டதற்கு, 'அதெல்லாம் அரசாங்க விஷயம். அதை வெளியே சொல்ல முடியாது' எனச் சொல்லிவிட்டார்கள். 

அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் அவர்களைத் தொடர்புகோண்டபோது, "மேற்கூரை விபத்து வழக்கு நிலுவையில் இருக்கு. கட்டடம் கட்டும்போது ஒரு பகுதி நல்லா இருக்குங்க. ஆனா, அடுத்த பகுதியில் பொறியாளரின் கவனக்குறைவால்தான் இந்தச் சம்பவம் நடந்துருக்கு. பொறியாளர் மீது அரசு வழக்கு போட்டிருக்கு. புது கட்டடம் கட்டுவதற்கு இன்னும் நிதி கொடுக்கல. அனைத்து வழக்குகளும் நிலுவையில் இருப்பதால் கட்டடம் கட்டும் பணி தாமதமாகும்" என்று தெரிவித்தார்.

அதிகாரிகளும் ஆளும் வர்க்கமும் முன்னதாகவே இந்தக் கட்டடத்தை ஆய்வு செய்திருந்தால் இக்கோர சம்பவம் நடந்திருக்காது. இன்று கால்களை இழந்து நிற்கும் முரளி, தன்னம்பிக்கையுடன் ஓட வேண்டிய இளம் வயதில் முடங்கிக் கிடக்கும் லதா, தந்தையின் வாசத்தைக்கூட அறியாத அந்தக் கைக்குழந்தை என பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்துக்கு இவ்வரசாங்கம் என்ன செய்ய இருக்கிறது? இந்த விவகாரத்தில் தனி நபர் விசாரணை அறிக்கையை வெளியிடுமா, புதுப் பேருந்து நிலையம் அமையுமா என எக்கச்சக்க கேள்விகளுடன் வலம் வருகிறார்கள் சோமனூர் மக்கள்..!

அடுத்த கட்டுரைக்கு