Published:Updated:

``இழப்பீட்டுத் தொகை வந்திடுச்சு கண்ணு... எல்லாருக்கும் நன்றிப்பா” நெகிழும் ஷாலினியின் தந்தை

மு.பார்த்தசாரதி
``இழப்பீட்டுத் தொகை வந்திடுச்சு கண்ணு... எல்லாருக்கும் நன்றிப்பா” நெகிழும் ஷாலினியின் தந்தை
``இழப்பீட்டுத் தொகை வந்திடுச்சு கண்ணு... எல்லாருக்கும் நன்றிப்பா” நெகிழும் ஷாலினியின் தந்தை

``ண்ணு இப்போதான்ப்பா ஈரோடு கலெக்டர் ஆபீஸ்ல இருந்து போன் பண்ணினாங்க. செக் வந்துடுச்சாம். பத்து மணிக்கு மேல வந்து வாங்கிக்கச் சொன்னாங்கப்பா” என்ற தகவலை காலையிலேயே தொலைபேசியில் தெரிவித்திருந்தார் நிருபர் ஷாலினியின் தந்தை ராஜேந்திரன். 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் பலியான நிருபர் ஷாலினியின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் நிவாரணத்தொகையிலிருந்து ரூ.3 லட்சம் வழங்குவதாக அப்போதே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால், இரண்டு மாதங்களாகியும் அந்த நிவாரணத்தொகை கிடைக்காததால் பலமுறை கலெக்டர் அலுவலகம் சென்று விசாரித்தவர் இறுதியில் அந்த முயற்சியை கைவிட்டிருந்தார். 'அப்பாவால அலைஞ்சு திரிய முடியலைப்பா. வயசான காலத்துல அந்தப் பணத்துக்காக என்னை அங்கயும் இங்கயும் நல்லா இழுத்தடிக்கிறாங்க” என்று சில வாரங்களுக்கு முன்பு அலுப்போடு பேசியவருக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினோம். பிறகு ஊடக நண்பர்களின் உதவியோடு தலைமைச்செயலகம் வரை இந்தத் தகவலை கொண்டு சேர்த்திருந்தோம். 

சில மணி நேரங்களுக்குப் பிறகு மீண்டும் அவரே தொலைபேசியில் அழைத்து ``கண்ணு, செக்கு கொடுத்துட்டாங்கப்பா. இப்போதான் வாங்கிட்டு வெளியே வரேன். ஷாலினியை இழந்து தவிச்சிட்டு நின்னப்போ நாங்க இருக்கிறோம்னு கூடவே எத்தனையோ பத்திரிகைகாரங்க இருந்தாங்க. இப்போதும் அவங்க எங்க குடும்பத்துக்கு சப்போர்ட் பண்ணிட்டுதான் இருக்கிறாங்க. எல்லாருக்கும் நன்றி கண்ணு” என்றவர் இறுதியாக, ``பைக்ல, கார்ல போகும்போது பாத்து கவனமா போங்கப்பா. நீங்க எல்லாரும் எம்புள்ளைங்கதானே கண்ணுங்களா” என்றார்.

அந்த வார்த்தை மனதில் இறுக்கமாக ஒட்டிக்கொண்டது.