
சென்னை: சென்னை பாரிமுனையில் பஸ் மோதி இரண்டரை வயது குழந்தை இறந்தது. குழந்தையின் தந்தை படுகாயம் அடைந்தார்.
சென்னை, கோவிலம்பாக்கம், எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் மாங்கிலால். அடகு கடை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி விமலா. இவர்களின் மகன்கள் நான்கு வயதான நிதேஷ், இரண்டரை வயதான பாரத். மாங்கிலால் குடும்பத்துடன் நேற்று பஸ்சில் பாரிமுனை அருகே உள்ள பாபா ராமா தேவ் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டனர். அதற்காக அவர்கள் பூக்கடை போலீஸ் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்றனர்.
##~~## |
அப்போது பிராட்வே பஸ் நிலையத்தில் இருந்து பூம்புகார் நகர் செல்லும் 42பி பஸ் குழந்தை பாரத் மீது மோதியது. இதில் பஸ்சின் சக்கரம் பாரத் தலையில் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பாரத் இறந்தான். இந்த விபத்தில் மாங்கிலாலும் படுகாயம் அடைந்தார்.
அத்துடன் பஸ் நிற்காமல் தறிகெட்டு ஓடி ரோட்டில் சென்ற 2 ஆட்டோக்கள், 2 பஸ்கள் மீதும் மோதி நின்றது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர்கள் அமிஞ்சிகரை தியாகராஜன், வண்ணாரப்பேட்டை முருகேசன் ஆகியோரும் காயம் அடைந்தனர். அவர்களும், மாங்கிலாலும் சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாங்கிலாலின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பஸ் டிரைவரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பூக்கடை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் தரமணியைச் சேர்ந்த பஸ் டிரைவர் ரமணய்யா, கொளத்தூர் புதிய லட்சுமிபுரத்தை சேர்ந்த கண்டக்டர் ஜானகிராமன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.