Published:Updated:

`அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம்!’ - மும்பை கட்டட விபத்து குறித்து குற்றம்சாட்டும் மக்கள்!

ராம் பிரசாத்

உலகின் மிக நெரிசலான நகரங்களின் பங்களாதேஷின் டாக்காவுக்கு அடுத்தபடியாக மும்பை உள்ளது.

மும்பை
மும்பை ( ANI )

மும்பையில் 100 வருட பழமையான 4 மாடி கட்டடம் நேற்று இடிந்து விழுந்தது. மும்பை டோங்கிரி பகுதியில் உள்ள தண்டல் தெருவில் இருந்த இந்தக் கட்டத்தில் 10 குடும்பங்கள் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மும்பையில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக ஏராளமான குடும்பங்கள் இன்னமும் இதுபோன்ற கட்டடங்களில்தான் வசித்து வருகின்றனர். மழை காலம் வந்தாலே பல குடும்பங்கள் தங்கள் கட்டடங்கள், எப்போது விழும் என்ற அச்சத்தில்தான் தங்களது வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். அவர்களுக்கு இடப்பெயர்வுக்கு வேறு இடங்கள் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவதில்லை. அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலே பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள், மார்க்கெட் போன்றவை இருப்பதும், இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. பிழைப்பைத் தேடி நாளுக்கு நாள் மும்பைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இதனால் வேறு வீடுகள் கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது. ஆபத்தை உணர்ந்துதான் மக்கள் இதுபோன்ற ஆபத்தான கட்டடங்களில் வசித்து வருகிறார்கள்.

மும்பை விபத்து
மும்பை விபத்து
ANI

மும்பை டோங்கிரி பகுதியில் நேற்று காலை 11.40 மணிக்கு இந்தக் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. கட்டடம் மளமளவென சரிந்ததைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து உடனடியாகத் தீயணைப்புத்துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்புத்துறை உடனடியாக அந்தக் கட்டடம் அமைந்திருந்த தண்டல் பகுதிக்கு விரைந்தனர். குறுகலான தெருக்கள், வாகன நெரிசல்கள் காரணமாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. அப்பகுதிக்கு சற்று தொலைவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்ட பேரிடர் மேலாண்மை குழுவினர் அவர்களைத் தூக்கிக்கொண்டுதான் வெளியில் வந்தனர். இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மும்பையில் இதுபோன்று இன்னும் 499 கட்டடங்கள் இருப்பதாக மாநகராட்சி கூறுகிறது. இது கடந்த ஆண்டு 619 ஆக இருந்ததாகக் கூறப்படுகிறது. பழைமையான கட்டடத்தின் நிலை குறித்து மகாராஷ்ட்ரா வீட்டு வசதி வாரியத்துக்கு 2017-ம் ஆண்டு தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மும்பை கட்டட சீரமைப்பு வாரியத் தலைவர் பேசுகையில், ``தற்போது இடித்த கட்டடத்தை சீரமைக்க பி.எஸ்.பி டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கு அனுமதியளித்து இருந்தோம். ஆனால், அவர்கள் பணிகளைத் தொடங்காமல் காலம் தாழ்த்திவந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். டோங்கிரி பகுதி மக்கள் வேறோரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். பழைய வீட்டை மறுசீரமைப்பு செய்வதற்கு மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அனுமதியளிப்பதில்லை என்கிறார்கள். உலகின் மிக நெரிசலான நகரங்களில் பங்களாதேஷின் டாக்காவுக்கு அடுத்தபடியாக மும்பை உள்ளது.

மீட்பு பணிகள்
மீட்பு பணிகள்
ANI

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ``இந்தக் கட்டடம் 100 ஆண்டுகள் பழைமையானது. அந்தப் பகுதியை மறுவடிவமைக்க நாங்கள் அனுமதி வழங்கியுள்ளோம். அந்த முயற்சி தாமதமாகிவிட்டதா என்பது விசாரணையின் பின்னர்தான் எங்களுக்குத் தெரிய வரும். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.