Published:Updated:

`விடிந்தால் குடும்பத்தைப் பார்க்கலாம் என நினைத்தார்கள்' - லாரிப் பயணத்தில் 14 பேருக்கு நேர்ந்த சோகம்

வெளிமாநிலப் பணியாளர்கள்
வெளிமாநிலப் பணியாளர்கள் ( மாதிரிப் படம் )

எப்படியும் ஊருக்குச் சென்று உறவுகளைப் பார்த்துவிடலாம் என்றிருந்தவர்களுக்கு இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருக்கக் கூடாது.

கொரோனா பாதிப்பு கடந்த நான்கு மாதங்களாக அனைத்து நாடுகளையும் முடக்கிப்போட்டுள்ளது. ஒவ்வொரு நாடும் தங்களால் முடிந்த அளவு, மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா பெருமளவு பரவுவதற்கு முன்பே ஊரடங்கு அறிவித்து கொரோனா பரவுவதைப் பெருமளவு தடுத்தாலும், பசியின் கோரத்தாண்டவத்தால் நிகழும் மரணங்களையும், அதன் பாதிப்புகளையும் தடுக்க முடியவில்லை. பசியால் நிகழும் பாதிப்புகள்தான், இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

வெளிமாநிலத் தொழிலாளர்கள்
வெளிமாநிலத் தொழிலாளர்கள்
மாதிரிப் படம்

பல்வேறு பணிகளுக்காகச் சொந்த மாநிலங்களிலிருந்து வேறு மாநிலங்களுக்கு வந்தவர்கள் ஊரடங்கினால் ஏற்பட்ட வேலையிழப்பு , பசியால் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆரம்பித்தனர். போக்குவரத்து வசதியில்லாத சூழலில் நடந்தே சென்றதில் சிலர் உயிரிழந்தனர். இரவு தண்டவாளத்தில் படுத்து ஓய்வெடுத்த சிலர் சரக்கு ரயில் ஏறி இறந்தனர். இப்படி வெளிமாநிலத்தவர்களின் பிரச்னை பெரிதாக உருவெடுக்கக் குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. ஆனாலும் எல்லா ஊர்களுக்கும் அந்த வசதி கிடைக்காததால், பேருந்து, லாரி எனக் கிடைக்கும் வாகனங்களில் கூட்டம் கூட்டமாக சொந்த மாநிலங்களுக்குப் பயணிக்கத்தொடங்கினார்கள் வெளிமாநிலப் பணியாளர்கள். அதுபோன்ற ஒரு பயணத்தில்தான் விபத்து ஏற்பட்டு இன்று காலை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்தியப்பிரதேசத்திலிருந்து உத்தரப்பிரதேசத்திற்கு எழுபதுக்கும் மேற்பட்ட நபர்களுடன் பயணம் செய்த லாரியின் மீது, பேருந்து மோதியதில் 14 வெளிமாநிலத்தவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 54 பேர் படுகாயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து, அந்த விபத்தில் காயங்களுடன் தப்பியவர் பேசுகையில், "பேருந்து வசதியில்லாததால் லாரிகளில் பயணிக்க ஆரம்பித்தோம். எல்லோரும் விடிந்தால் குடும்பத்தைப் பார்த்துவிடலாம் என்ற கனவோடு இருந்தோம். கையில் காசில்லாமல் பசியுடன் காத்திருந்தோம். ஆனால் எல்லாவற்றையும் சிதைக்கும்விதமாக அதிகாலை மூன்று மணிக்கு அந்த விபத்து நடந்தது. நாங்கள் எல்லோரும் தூக்கத்தில் இருந்தோம். அந்த பஸ் மோதி காயங்களுடன் தப்பிய போதுதான் எங்கு இருக்கிறோம் என்பதை நிதானிக்க முடிந்தது. சிலர் அங்கேயே இறந்த நிலையில் கிடந்தனர். சிலர் காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பொழுது விடிந்தால் குழந்தைகளைப் பார்த்துவிடலாம் என்று பேசிக்கொண்டிருந்தவர்களின் சடலங்களைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து காவல் துறையினர் பேசுகையில்," இந்தச் சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலம் குணா நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ளது. அந்தப் பேருந்து குணாவிலிருந்து அகமதாபாத் செல்லும் பேருந்து. அதிக வேகத்தில் வந்ததன் காரணமாக விபத்து நடந்துள்ளது. லாரியில் இருந்தவர்கள் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். எப்படியும் ஊருக்குச் சென்று உறவுகளைப் பார்த்துவிடலாம் என்றிருந்தவர்களுக்கு இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருக்கக் கூடாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு