Published:Updated:

`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்!’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்!’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
`தண்டவாளம் அருகே தசரா கொண்டாட்டம்!’ - பஞ்சாபில் ரயில் மோதி 50 - க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே, ஜோடா பதாக் என்னும் இடத்தில் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்தப் பண்டிகையின் ஒரு பகுதியாக, ராவணனின் உருவ பொம்மையை எரிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ரயில் பாதைக்கு அருகே நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தின்போது, சிலர் ரயில்வே தண்டவாளத்தில் நின்றுகொண்டு ராவணன் உருவ பொம்மையை எரிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது பட்டாசு வெடிச் சத்தத்தால், அந்தப் பாதையில் ரயில் வருவதை அங்கிருந்த மக்கள் கவனிக்கவில்லை. அதிவேகத்தில் வந்த ரயில், தண்டவாளத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது. இதில், பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  தசரா விழாவில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிலையில், இந்த ரயில் விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பலர் படுகாயமடைந்திருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள், அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைசக்காக கொண்டுசெல்லப்பட்டனர்.

சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட அமிர்தசரஸ் போலீஸ் கமிஷனர் எஸ்.எஸ்.ஸ்ரீவத்சவ், ``விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை இதுவரை சரியாகக் கணக்கிடமுடியவில்லை. ஆனால், 50 முதல் 60 பேர் வரை இறந்திருக்கலாம். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது’’ என்றார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் அனுமதியின்றி இந்தக் கொண்டாட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டதாகவும், பஞ்சாப் அமைச்சர் சித்துவின் மனைவி கௌர் சித்துதான் நிகழ்ச்சியில் தலைமை வகித்தார் என்றும் குற்றம் சாட்டியிருக்கின்றனர். 

இந்தச் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ``பஞ்சாப் ரயில் விபத்துகுறித்த செய்தி மிகவும் கவலை அளிக்கிறது.  இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டிருக்கிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல, விபத்துகுறித்து கவலை தெரிவித்துள்ள பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வுசெய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்குத் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு மற்றும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் பஞ்சாப் அரசு அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், `அமிர்தசரஸில் ஏற்பட்ட விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெருக்கடியான இந்த நேரத்தில் எங்களால் முடிந்த உதவியைச் செய்ய தயாராக உள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.