Published:Updated:

`விழா நடப்பது தெரியல; கிரீன் சிக்னல்தான் இருந்தது' - எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநர் வாக்குமூலம்

`விழா நடப்பது தெரியல; கிரீன் சிக்னல்தான் இருந்தது' - எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநர் வாக்குமூலம்
`விழா நடப்பது தெரியல; கிரீன் சிக்னல்தான் இருந்தது' - எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநர் வாக்குமூலம்

‘எந்தத் தடைகளும் இல்லை என்ற கிரீன் சிக்னல்தான் எனக்குத் தரப்பட்டது’ என அமிர்தசரஸ் விபத்தின்போது ரயில் ஓட்டிய ஓட்டுநர் தெரிவித்துள்ளார். 

Photocredits : Twitter/ @rahulseervi36

பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் ஜோரா பதாக் என்னும் இடத்தில் நேற்று நடந்த தசரா விழாவின்போது ரயில் தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த மக்கள் மீது விரைவு ரயில் மோதியது  இந்த விபத்தில் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பல குழந்தைகளும் பெண்களும் இருந்துள்ளனர். 

இந்த விபத்து பிரச்னை தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. பஞ்சாபில் உள்ள ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் மாறி மாறி புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விபத்து ஏற்படுத்திய ரயிலை ஓட்டிவந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பற்றி அவர் போலீஸுக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில், ``எந்தத் தடைகளும் இல்லை; ரயிலை இயக்கலாம் என்ற கிரீன் சிக்னல்தான் எனக்கு வழங்கப்பட்டது. விழா நடப்பது தொடர்பான எந்தத் தகவலும் எனக்கு தெரிவிக்கப்படவில்லை. தண்டவாளத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நின்றுகொண்டிருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. அங்கு விழா நடக்கும் என்ற சிந்தனையே எனக்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளார். 

ஜோரா பதாக் பகுதியில் இருக்கும் லைன்மேனிடம் நிகழ்ச்சி குறித்தும் தண்டவாளத்தில் மக்கள் நிற்பது குறித்தும் ஏன் ஓட்டுநரிடம் தெரிவிக்கவில்லை என போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் ‘அங்கு நடந்த தசரா விழா குறித்து எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை’ என டெல்லி மற்றும் பஞ்சாப் ரயில் நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். தொடர்ந்து ‘இந்த இடத்தில் விழா நடத்த எங்களிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை’ என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

‘மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற அங்குள்ள மருத்துவர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். அவர்கள் சிறந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்’ என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ஓ.பி.சோனி குறிப்பிட்டுள்ளார். மேலும், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிரிக்கெட் வீரர் சித்துவின் மனைவிதான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். விபத்தை அடுத்து இன்று காலை காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வந்த சித்து பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.