Published:Updated:

மூன்றாண்டுகளில் 50 ஆயிரம் பேர்... பஞ்சாபின் ரயில் விபத்துகள்! #VikatanInfographics

இந்தியா முழுவதும் ரயில் மோதி மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. நாடு முழுவதும் சராசரியாக ஒரு நாளுக்கு இதுபோன்று 44 சம்பவங்கள் நிகழ்கின்றன; சராசரியாக தினமும் 45 பேர் இப்படியாக உயிரிழக்கின்றனர்.

மூன்றாண்டுகளில் 50 ஆயிரம் பேர்... பஞ்சாபின் ரயில் விபத்துகள்! #VikatanInfographics
மூன்றாண்டுகளில் 50 ஆயிரம் பேர்... பஞ்சாபின் ரயில் விபத்துகள்! #VikatanInfographics

பஞ்சாப் மாநிலத்தின் தசரா கொண்டாட்டங்கள் யாரும் எதிர்பார்க்காத சோகத்தில் முடிந்தன. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிலுள்ள ஜோதா பதக் பகுதியில் தசரா விழா நடந்துகொண்டிருந்தது. அந்த ஊரின் துணி துவைக்கும் இடமான அப்பகுதி முக்கோண வடிவிலானது. அதன் அருகில் இருந்த ரயில் தண்டவாளத்துக்கும், அந்த இடத்துக்கும் இடையில் 20 அடி சுவர் ஒன்று இருந்தது.

பஞ்சாப் மாநில அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து அந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தசரா விழாவை அப்பகுதியின் கவுன்சிலர் விஜய் மதன் என்பவரின் மகன் சௌரப் மதன் மிது ஒருங்கிணைத்து இருந்தார். காவல் நிலையத்தில் விழா நடத்துவதற்காக முறையான அனுமதியும் பெறப்பட்டிருந்தது. 

25 அடியில் ராவணன் பொம்மை செய்யப்பட்டு, எரிக்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்தது. மாலை 6 மணிக்கு எரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், சிறப்பு விருந்தினர் நவஜோத் கவுர் சித்து தாமதமாக வந்ததால் 6.45 மணிக்கு எரிக்கப்பட்டது. 2000 பேர் இருப்பதற்கான கொள்ளளவு கொண்ட அந்த நிலத்துக்கு வெளியே இருந்தவர்களோடு சேர்த்து, மொத்தம் 5000 பேர் அந்த நிகழ்வுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. ராவணன் எரிக்கப்படுவதை தெளிவாகப் பார்க்க, மக்கள் சற்று உயரமாக இருந்த ரயில் தண்டவாளத்தைத் தேர்ந்தெடுத்தனர். 

வழக்கமாக மாலை 7 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன்பு அப்பகுதியைக் கடக்கும் அம்ரிஸ்டர் - ஹவுரா ரயில் வழக்கம்போல அந்த வழியில் வந்தது. மக்கள் கூடியிருந்த இடத்திலிருந்து, வெறும் 400 மீட்டர் தொலைவில் இருந்த ரயில்வே கேட்டில் இருந்தவர் மக்கள் நின்றுகொண்டிருப்பதைக் கவனிக்காமல் பச்சை சிக்னல் காட்ட, ரயில் மக்களை நோக்கி வேகமாகப் பாய்ந்தது. 

ராவணன் கொளுத்தப்பட்டுக் கொண்டிருந்ததால் எழுந்த பெரும் சத்தத்தால் ரயில் வருவதைப் பலரால் கவனிக்க முடியவில்லை; மேலும் ரயில் நிறுத்தப்படக்கூடிய வேகத்தை விட அதிகமாக இயக்கப்பட்டதால், நிறுத்த முடியாமல் மக்கள் மீது மோதியது. சில நொடிகளில் பல ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் எந்தவித வேறுபாடுமில்லாமல் தூக்கியெறியப்பட்டனர். தண்டவாளத்தில் ரயிலுக்கு அடியில் பல உடல்கள் நசுங்கின. தப்பித்த ஓடிய மக்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவாகியது. 60 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் இன்றும் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியா முழுவதும் ரயில் மோதி மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. நாடு முழுவதும் சராசரியாக ஒரு நாளுக்கு இதுபோன்று 44 சம்பவங்கள் நிகழ்கின்றன; சராசரியாகத் தினமும்  45 பேர் இப்படியாக உயிரிழக்கின்றனர். 

ரயில்வே துறை இப்படியான சம்பவங்களுக்குப் பல காரணங்கள் இருப்பதாகக் கூறுகின்றது. தண்டவாளத்தைக் கடப்பது, பாதுகாப்பு விதிகளை மீறுவது, நடைமேடைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது, செல்போன் முதலிய எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்திக்கொண்டு ரயில் தண்டவாளத்தைக் கடப்பது முதலானவற்றைப் பட்டியலிட்டுள்ளது. இத்தகைய விதிகளை மீறியதாக 1.73 லட்சம் பேர் 2015 முதல் 2017 வரையிலான 3 ஆண்டுகளில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் ரயில் தண்டவாளங்களில் இறந்துள்ளனர்.

பஞ்சாபில் நிகழ்ந்த துயரச் சம்பவத்துக்குக் காரணம் மாநில அரசு என எதிர்க்கட்சிகளும், ரயில்வே துறை என மாநில அரசும், விழாவுக்கு அனுமதி தந்த காவல்துறை எனவும், விழாவுக்கு அனுமதி வாங்கியதில் கவுன்சிலர் மகன் முறைகேடு செய்ததுதான் குற்றம் எனவும், நவ்ஜோத் கவுர் சித்து தாமதமாக வந்ததுதான் காரணம் எனவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளனர். தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த நிகழ்வை விசாரிக்க கமிட்டி அமைத்துள்ளது. 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் இறக்க, பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. தொடரும் ரயில் மோதும் சம்பவங்களிலிருந்து மக்கள் பாடம் கற்க வேண்டும்; ஆபத்தான முறையிலும், கவனக்குறைவற்ற முறையிலும் ரயில் தண்டவாளங்களைக் கடப்பது அறவே தவிர்க்கப்படுவது சிறந்தது.