Published:Updated:

குடிபோதையில் வாகனம் ஓட்டிய இளம்பெண்ணால் சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

குடிபோதையில் வாகனம் ஓட்டிய இளம்பெண்ணால் சிறுமிக்கு நேர்ந்த சோகம்!
குடிபோதையில் வாகனம் ஓட்டிய இளம்பெண்ணால் சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

டெல்லியில் 22 வயதாக இளம் பெண் ஒருவர் தன் நண்பர்களுடன் குடித்துவிட்டு கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 13 வயது சிறுமி கண்பார்வை இழந்த நிலையில் உயிருக்குப் போராடி வருகிறார். 

PhotoCredits : Twitter/@QuadeersultanM

ஷிவானி மாலிக் என்ற 22 வயதான இளம் பெண் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு தனது நண்பர்களுடன் இணைந்து மது அருந்திவிட்டு காரை ஓட்டிச் சென்றுள்ளார். அவர் ஓட்டி வந்த கார் டெல்லி பஞ்சாபி பாக் மேம்பாலத்தில் வரும்போது நிலை தடுமாறி எதிரே வந்த மற்றோரு காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து ஷிவானியுடன் வந்த ஆண் நண்பர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

மேலும் இந்த விபத்தில் எதிரே வந்த காரில் இருந்த பூனம் (38) என்ற பெண்ணும் சேதன்யா என்ற அவரது 13 வயது மகளும் பலத்த காயமடைந்தனர். இதில் பூனம் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரின் மகள் கண் பார்வை இழந்து மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய சிறுமியின் உறவினர் சோனியா,“ சேதன்யாவுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.காரின் சிறு கண்ணாடி துகள்கள் அவளின் கண்ணில் பலமாகக் கீறியுள்ளன. இதனால் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்ய சேதன்யாவின் தாய் பூனமின் கண்ணைப் பொருத்த மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆனால், தற்போது அறுவை சிகிச்சையை தாங்கும் அளவுக்கு சேதன்யாவின் உடலில் வலு இல்லை என்கிறார்கள். இறந்த பூனம் கண்களை இரண்டு நாள்களுக்கு மேல் பதப்படுத்த முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார். 

விபத்து ஏற்பட்ட தினம் காரை ஓட்டிவந்த சேதன்யாவின் தந்தை விமல் இதுபற்றி கூறும் போது, “ அன்று நான்தான் காரை ஓட்டி வந்தேன். என் எதிரே ஒழுங்கற்ற முறையில் ஒருவர் காரை ஓட்டிவருவதைக் கண்ட நான் சிறிது இடைவெளிக்கு முன்பாகவே என் காரை நிறுத்திவிட்டேன். இருந்தும் அந்த கார் நேராக வந்து எங்கள் மீது மோதியது. கண் இமைக்கும் நேரத்துக்குள் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது” என்று கதறியிருக்கிறார். விபத்து ஏற்படுத்திய ஷிவானி மாலிக் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.