Published:Updated:

இமாசலில் ஆற்றில் கவிழ்ந்து தனியார் பேருந்து விபத்து... 9 பேர் பலியான சோகம்!

இமாசலில் ஆற்றில் கவிழ்ந்து தனியார் பேருந்து விபத்து... 9 பேர் பலியான சோகம்!
இமாசலில் ஆற்றில் கவிழ்ந்து தனியார் பேருந்து விபத்து... 9 பேர் பலியான சோகம்!

இமாசல பிரதேசத்தில் அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்து, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 25 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும்  காவல்துறை அறிவித்துள்ளது.


ரேணுகா ஜி என்ற இடத்திலிருந்து நாஹன் என்ற இடத்தை நோக்கிச்சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ரேணுகா டடாஹு சாலையில் அமைந்துள்ள காத்ரி என்ற கிராமத்துக்கு அருகில் ஜலால் நதியில் கட்டப்பட்டுள்ள பாலத்தின்மேல் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தை உடைத்துக்கொண்டு ஜலால் நதியில் 40 அடிப் பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. விபத்து நடைபெற்ற ஜலால் நதி சிம்லாவிலிருந்து 168 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த விபத்து ஞாயிறு (25.11.2018) மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது என்று விபத்தை ஆய்வு செய்த காவல்துறை அதிகாரி விரேந்திர சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.


மேலும் இவர், “விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஐந்துபேர் நாஹன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்த 51 பயணிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இறந்தவர்களில் இருவர்மட்டும் நாஹன் கிராமத்தைச் சேர்ந்த சத்யராம் (59), அவரது மனைவி பக்வானி தேவி (52) என்பது அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனது. பேருந்து பாலத்தைக் கடக்கும்போது  அதிவேகமாகச் சென்றதே விபத்துக்குக் காரணம் என்று பேருந்தில் பயணித்த பயணிகள் தெரிவித்தனர் என்றும் தெரிவித்துள்ளார். 


சிமௌர்  துணை ஆணையர் லலித் ஜெயின் விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், நாஹன் மண்டல துணை நீதிபதி 20 நாளுக்குள் விபத்துக்குரிய காரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் இறந்தவர் குடும்பத்துக்கு 20,000 ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 5000 ரூபாயும் நிவாரணமாக வழங்கக் காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


டெல்லியிலிருந்து சென்ற மற்றொரு பேருந்து சலோன் மாவட்டத்துக்கு அருகில் பள்ளத்தாக்கில் விழுந்து மற்றொரு விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.