Published:Updated:

`ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்ற யோசிக்கக் கூடாது!’ - மும்பை தீ விபத்தில் 10 பேரை மீட்ட ஸ்விக்கி டெலிவரி பாய்

தீவிரமாக எரிந்துகொண்டிருந்த தீயையும் பொருட்படுத்தாமல் உள்ளே சென்றுள்ளார் சித்து. அவர் உள்ளே சென்றபோது புகையும் அதிகமாக இருந்ததால் மூச்சுவிடக்கூட முடியாத சூழலே அங்கே இருந்திருக்கிறது. ஆனால், அவற்றையும் அவர் ஒரு பொருட்டாக நினைக்கவே இல்லை. மூன்று மணி நேரம் மக்களை மீட்கும் வேலையில் தீவிரமாக இருந்த சித்து எல்லோரையும் மீட்ட பின்பு அங்கிருந்த தீயணைப்புப் படை வீரரிடம் தனக்கு லேசாக வலிப்பதாகச் சொல்லியுள்ளார்.

`ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்ற யோசிக்கக் கூடாது!’ - மும்பை தீ விபத்தில் 10 பேரை மீட்ட ஸ்விக்கி டெலிவரி பாய்
`ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்ற யோசிக்கக் கூடாது!’ - மும்பை தீ விபத்தில் 10 பேரை மீட்ட ஸ்விக்கி டெலிவரி பாய்

“ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய யோசிக்கவோ, பயப்படவோ கூடாது” - இது மும்பையில் உள்ள இ.எஸ்.ஐ.சி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 10 நோயாளிகளைக் காப்பாற்றிய, ஸ்விக்கி டெலிவரி பாய் சித்து ஹுமன்படே சொன்னது.

மும்பை அந்தேரி பகுதியில் தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்ட மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. அந்த மருத்துவமனையின் தரைதளத்தில் வைக்கப்பட்டிருந்த கழிவுகளை நீக்கும்போது எதிர்பாராத விதமாகத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நோயாளிகள், அவர்களைப் பார்க்க வந்தவர்கள் மற்றும் வேலைசெய்தவர்கள் என 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஸ்விக்கி டெலிவரி பாய் சித்து ஹுமன்படே (20) உணவு டெலிவரி செய்வதற்காக, மும்பை அந்தேரியின் மரோல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது இ.எஸ்.ஐ.சி காம்ஹர் மருத்துவமனையில் இருந்து புகை வந்துகொண்டிருப்பதைப் பார்த்துள்ளார். உடனடியாகக் களத்தில் இறங்கிய அவர், தீயில் சிக்கிய 10 நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். அதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது மும்பையின் செவன் ஹில்ஸ் மருத்துவனமனயில் சிகிச்சை பெற்றுவருகிறார். 

“நான் உணவு டெலிவரி செய்யச் சென்றுகொண்டிருந்தபோது உதவி கேட்டு மக்கள் சத்தம் போட்டது என் காதில் விழுந்தது. அங்கிருந்த மருத்துவமனை ஜன்னல் வழியே புகை வெளியேறிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். அதைப் பார்த்த உடனேயே தீயணைப்புப் படைவீரர்கள் வைத்திருந்த ஏணியில் ஏறி, அந்த ஜன்னல் கண்ணாடியைக் கல்லால் உடைத்து உள்ளே நுழைந்துவிட்டேன். நான் ஏறிவந்த ஏணியிலேயே உள்ளே இருந்தவர்களை வெளியேற்றிவிட்டேன். அப்படி வெளியேறிக்கொண்டிருந்தபோது திடீரென ஏணி உடைந்து இரண்டு பெண்கள் கீழே விழுந்துவிட்டார்கள். என்னால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை” என்றார் சித்து. 

தீவிரமாக எரிந்துகொண்டிருந்த தீயையும் பொருட்படுத்தாமல் உள்ளே சென்றுள்ளார் சித்து.  உள்ளே சென்றபோது புகை அதிகமாக இருந்தது. மூச்சுவிட முடியாத சூழல் நிலவியது. அதை அவர் ஒரு பொருட்டாக நினைக்கவே இல்லை. மூன்று மணி நேரம் நோயாளிகளை மீட்கும் பணியில் தீவிரமாக இருந்தார்.

எல்லோரையும் மீட்ட பின் தீயணைப்புப் படை வீரரிடம், தனக்கு லேசாக வலி இருப்பதாகச் சொல்லியுள்ளார். தீயணைப்புப் படை வீரர்கள் உடனே அவரை செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். “நான் முகத்தில் கர்சீஃபைபைக் கட்டிக்கொண்டுதான் உதவி செய்துகொண்டிருந்தேன். ஆனால், அது எங்கேயோ விழுந்துவிட்டதால் என்னால் அதிக நேரம் அங்கே இருக்க முடியவில்லை” என்று தனக்கு ஏற்பட்ட காயத்தை விவரித்தார். சித்து விரைவில்  குணமாகிவிடுவார் என டாக்டர்கள் தெரிவித்தனர். 

பத்தாவது வரை படித்துள்ள சித்து சமீபத்தில்தான் மும்பை ஐரோலியிலிருந்து அந்தேரிக்குக் குடியேறினார். தன் மாமா வீட்டில் தங்கியிருந்து ஸ்விக்கியில் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். “நாங்கள் மருத்துவமனைக்குச் சென்றபோது ஆக்ஸிஜன் குழாய் மூலமாகத்தான் அவன் சுவாசித்துக்கொண்டிருந்தான். கையில் குளுக்கோஸ் ஏற்றிக்கொண்டிருந்தனர். அதைப் பார்த்ததும் மனசு பதறிவிட்டது. ஆனால், அவன் உதவி செய்ததைக் கேட்டபோது பெரிய ஆச்சர்யமாக இல்லை. ஏனென்றால் அவனது குணமே அடுத்தவர்க்கு உதவுவதுதான்” என்றார் சித்துவின் அண்ணன் சந்தகாந்த் 

Photo Credit:TOI

எதையும் எதிர்பார்க்காமல் 10 நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றிய சித்துவுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிகின்றன. விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு 1 லட்ச ரூபாய், இறந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வர் அறிவித்துள்ளார்.