Published:Updated:

`வேலூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியான பரிதாபம்!

`வேலூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியான பரிதாபம்!
`வேலூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியான பரிதாபம்!

வாலாஜாபேட்டையில் டிரெய்லர் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னை இ.சி.ஆர் பனியூர் பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் அலி (45). இவர், சோழிங்கநல்லூரில் கோழி வியாபாரம் செய்து வந்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கொளத்தூரில் சாதிக் அலியின் உறவினர், 40 நாள்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இறந்தவரின் காரிய நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சாதிக் அலி தன்னுடைய மனைவி பர்வீன் (35), எஸ்.எஸ்.எல்.சி படிக்கும் மகன் மாபூப் பாஷா (15) மற்றும் தந்தை அன்வர் (70), தாயார் அவாமாபி (65), பெரிய மாமனார் அகமது பாஷா (60) ஆகிய 5 பேரையும் இன்று ஆரணிக்கு காரில் அழைத்துச் சென்றார்.

காரிய நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக மாலை சென்னை திரும்பினர். காரை, சாதிக் அலி ஓட்டினார். வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை வன்னிவேடு இந்திரா நகர் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, தேசிய நெடுஞ்சாலையோரமுள்ள பெட்ரோல் பங்க்கில் இருந்து அதிவேகத்தில் வெளியே வந்த டிரெய்லர் லாரி ஒன்று, திடீரென எதிர்புறமாக திரும்பியது. கண் இமைக்கும் நேரத்தில் டிரெய்லர் லாரியில் கார் மோதி அப்பளம் போல் நொறுங்கி உருக்குலைந்தது. காரில் இருந்த சாதிக் அலி உட்பட அவரின் குடும்பத்தினர் 6 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவலறிந்ததும், எஸ்.பி. பிரவேஷ்குமார், சப்-கலெக்டர் இளம்பகவத், டி.எஸ்.பி கலைச்செல்வம், தாசில்தார் பூமா, வாலாஜா இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சுமார் 2 மணி நேரம் போராடி நொறுங்கிய காருக்குள் கிடந்த 6 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக, இரவு 9 மணி வரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு பிறந்தவுடன் வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் முதல் கோர விபத்து இதுவே.ஒரே குடும்பத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.