Published:Updated:

அரக்கோணம் ரயில் இன்ஜின் பராமரிப்புப் பணிமனையில் பயங்கர தீ!

அரக்கோணம் ரயில் இன்ஜின் பராமரிப்புப் பணிமனையில் பயங்கர தீ!
அரக்கோணம் ரயில் இன்ஜின் பராமரிப்புப் பணிமனையில் பயங்கர தீ!

அரக்கோணம் அருகே ரயில் இன்ஜின் பராமரிப்புப் பணிமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு, வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த புளியமங்கலத்தில் ரயில் இன்ஜின் பராமரிப்புப் பணிமனை உள்ளது. இங்கு, ரயில் இன்ஜின்களில் இருந்து பழைய பெயின்ட் நீக்கப்பட்டு, புதிய பெயின்ட் அடிக்கும் பணி நடைபெறுகிறது. பணிமனையில் இன்று மதியம், வழக்கம்போல் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். வெல்டிங் பணி நடந்துகொண்டிருந்தபோது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாததால், வேகமாகப் பரவியது. தீயில் பல்வேறு பொருள்கள் வெடித்துச் சிதறின. தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. 

நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பெயின்ட் டப்பாக்கள், இன்ஜின் பராமரிப்பு உபகரணங்கள் எரிந்து நாசமானது. வேலையாட்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால், உயிர் சேதம், யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.