Published:Updated:

``இனிமேல் எங்களால் முடியாது” - மேகாலயா சுரங்க மீட்புப்பணியை நிறுத்தியது கடற்படை

``இனிமேல் எங்களால் முடியாது” - மேகாலயா சுரங்க மீட்புப்பணியை நிறுத்தியது கடற்படை
``இனிமேல் எங்களால் முடியாது” - மேகாலயா சுரங்க மீட்புப்பணியை நிறுத்தியது கடற்படை

மேகாலயாவின் கிழக்கு ஜைன்டியா மாவட்டத்தில் இருக்கும் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில், 35 நாள்களுக்கு முன் 15 தொழிலாளர்கள் சிக்கினர். ஆரம்ப நாள்களில் மீட்புப்பணிகளைச் சரிவர மேற்கொள்ளாததால், அவர்களை உயிருடன் மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்தன. அடுத்தடுத்த நாள்களில், இந்திய கடற்படை, கோல் இந்தியா, தேசியப் பேரிடர் மீட்புப்படைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் இணைந்து, மீட்புப்பணிகளைத் துரிதப்படுத்தினர். உயர்திறன் மோட்டார் கருவிகள்மூலம், சுரங்கத்தில் சூழ்ந்திருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் வேகமெடுத்தன.

இது ஒருபுறம் நடக்க, மற்றொரு புறம் கடற்படையைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் கயிறுகளைக் கட்டி உள்ளே இறங்கி தொழிலாளிகளைத் தேடினர். ஆனால், அவர்களுக்கு 40 அடிவரை மட்டுமே செல்வதற்கு பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதால், பாதியிலேயே திரும்பிவந்தனர். கிட்டத்தட்ட 15 நாள்களுக்குப் பிறகு, சில தலைக்கவசங்கள் மட்டும் சிக்கின. அடுத்த சில நாள்களில், “தொழிலாளர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை” என்று அறிவிக்கப்பட்டது. ”அவர்களின் சடலங்களை மீட்டுத்தாருங்கள். இறுதிச்சடங்கு செய்ய வேண்டும்” என்று, அங்கே காத்திருந்த தொழிலாளிகளின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். உச்ச நீதிமன்றமும், 'மீட்புப்பணிகள் ஏன் இவ்வளவு மந்தமாக நடைபெறுகின்றன?' என்று கடிந்துகொண்டது. 

அடுத்ததாக, தொழிலாளிகளின் உடல்களை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. கடந்த புதன்கிழமை, ஒரு தொழிலாளியின் உடல் அடையாளம் காணப்பட்டது. அதை மீட்பதற்காகத் தானியங்கிக் கருவிகளை உள்ளே அனுப்பினர் கடற்படையினர். நான்கு நாள்களுக்கும் மேலாகத் தொழிலாளியின் உடலை மீட்கும் பணி நடந்தது. ஆனால், அந்த முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டதாக, தற்போது அறிவித்திருக்கிறது கடற்படை. “உடல் அதிகமாகச் சிதைந்திருப்பதால், அதை மேலே இழுத்துவர முடியவில்லை. இனிமேல் எங்களால் முடியாது. இத்துடன் மீட்புப்பணிகளை நிறுத்தவேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம்” என்று அறிவித்திருக்கிறார்கள்.

ஆனாலும், 'மீட்புப்பணிகளை நிறுத்தக் கூடாது' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், மீட்பு நடவடிக்கைகள் முழுவதுமாகக் கைவிடப்படவில்லை.