Published:Updated:

‘தீக்கிரையான வீடுகள்; தெருவில் நிற்கும் 8 குடும்பங்கள்!’ - வேலூர் துயரம்

‘தீக்கிரையான வீடுகள்; தெருவில் நிற்கும் 8 குடும்பங்கள்!’ - வேலூர் துயரம்
‘தீக்கிரையான வீடுகள்; தெருவில் நிற்கும் 8 குடும்பங்கள்!’ - வேலூர் துயரம்

வேலூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, நிவாரண உதவி செய்ய, தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ உட்பட எந்த அரசியல் கட்சியினரும் முன்வராதது, பொதுமக்களிடம் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் சேண்பாக்கம் திரௌபதி அம்மன் கோயில் தெருவில், நேற்று காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சரத் என்பவரின் குடிசை வீடு உட்பட மொத்தம் 8 குடிசைகள் தீக்கிரையாகின. வீடுகளில் இருந்த ஆடைகள், மின்சாதனப் பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்கு, வருவாய்த்துறையினர் உடனடி நிவாரணமாக 5 கிலோ அரிசி, வேட்டி-சேலை கொடுத்தனர். தீ விபத்துக்கான முழுமையான காரணம், இன்னும் தெரியவரவில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட 8 குடும்பங்களை இரண்டு நாள்களாகியும் இதுவரை அரசியல் கட்சியினர் ஒருவர்கூடச் சந்தித்து நிவாரணப் பொருள்கள் வழங்கவில்லை.

5 கிலோ அரிசி வழங்கிவிட்டுச் சென்ற தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறையினர் மீண்டும் எட்டிப் பார்க்கவில்லை. ‘‘பாதிக்கப்பட்டவர்கள் எங்கு தங்குவார்கள்? அவர்கள் தற்காலிகமாகத் தங்க மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கலாம்’’ என்ற அடிப்படை சிந்தனைகூட அதிகாரிகளின் மூளைக்கு எட்டவில்லையா என்று கேள்வி எழுப்பிய பொதுமக்கள், ‘‘அதிகாரிகளின் அலட்சியம் இப்படி என்றால், அரசியல்வாதிகளின் சுயநலம் பலமடங்கு அதிகம். ஆளுங்கட்சியினர், தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திகேயன், பா.ம.க, தே.மு.தி.க, வி.சி.க, ம.தி.மு.க உட்பட அனைத்து கட்சிக்காரர்களும் அருகில் இருந்துகூட நமக்கென்ன என்பதைப்போல் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஓட்டுப்போட்டு ஒரு பிரயோஜனமும் இல்லை’’ என்று கடிந்து கொட்டினர்.

இதையறிந்த, வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர், பாதிக்கப்பட்ட 8 குடும்பங்களையும் இரண்டு நாள்களாக நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, உடனடியாக நிவாரண பணிகளை மேற்கொண்டு அத்தியாவசிய பொருள்களை வழங்கினர். உணவு சமைத்து, அவர்களுக்குப் பரிமாறினர். அதுமட்டுமன்றி, 8 குடும்பத்தினரையும் ஜவுளிக்கடைக்கு அழைத்துச் சென்று தேவையான ஆடைகளை வாங்கிக் கொடுத்தனர். 10 நாள்களுக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகை பொருள்களுடன், பெண்களுக்குத் தையல் இயந்திரம் கொடுத்து உதவி செய்தனர். 

ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி, இணைச் செயலாளர் நீதி என்கிற அருணாசலம், மன்ற நிர்வாகி ஜெய சீனிவாசன், இளைஞரணி செயலாளர் அருண், மாநகரச் செயலாளர் சுதாகர் மற்றும் இணைச் செயலாளர் அக்பர் பாஷா, துணை செயலாளர்கள் பாலாஜி, சரவணன், மாநகர மகளிரணி செயலாளர் லட்சுமி ரமேஷ், மண்டலச் செயலாளர்கள் ராஜ்குமார், மோகன், பாண்டு, ராஜா ஆகியோர் இவற்றைச் செய்தனர். ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.