Published:Updated:

`செல்போன் ரிங்காகுது, யாரும் எடுக்கல!’ - கப்பல் விபத்தில் சிக்கிய மகனுக்காகக் காத்திருக்கும் தாய் கண்ணீர்

`செல்போன் ரிங்காகுது, யாரும் எடுக்கல!’ - கப்பல் விபத்தில் சிக்கிய மகனுக்காகக் காத்திருக்கும் தாய் கண்ணீர்
`செல்போன் ரிங்காகுது, யாரும் எடுக்கல!’ - கப்பல் விபத்தில் சிக்கிய மகனுக்காகக் காத்திருக்கும் தாய் கண்ணீர்

ரஷ்யா கடல் பகுதியில் கப்பல்கள் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 பேர் இறந்தனர். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 10 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. இதில் தஞ்சாவூரை சேர்ந்த இளைஞரும் ஒருவர். அவரின் பெற்றோர்கள், ``தன் மகனின் செல்போனுக்கு ரிங்க் போகிறது. ஆனால், அவனின் நிலை என்னவென்று தெரியாமல் தவிக்கிறோம். அவனது செல்போன் ரிங்கில் எங்கள் உயிரும் அடங்கியிருக்கிறது’’ என்று ஏக்கத்தோடு தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வடக்கு என்ற ஊரை சேர்ந்தவர் ஆனந்த்சேகர். இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் மத்திய காவல் படையில் துணை ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி அல்லிராணி, மதுக்கூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அவினாஷ், கோவையில் பி.டெக் மரைன் இன்ஜினீயரிங் படித்து விட்டு மும்பையில் மேல் படிப்பு படித்தார். பின்னர், நடைபெற்ற நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். அதன் அடிப்படையில் மும்பையில் உள்ள லிபோஸ் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள தான்சானியா  நாட்டு கப்பலில் பயிற்சி மரைன் இன்ஜினீயராகப் பணிக்குச் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகிறது.

இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி அவினாஷ் மற்றும் ஊழியர்களோடு கப்பல், சமையல் எரிவாயு ஏற்றிச் சென்றது. உக்ரைன் பகுதியில் இருந்து மற்றொரு கப்பல் வந்தது. அப்போது ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடல் பகுதியில் இரண்டு கப்பல்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு கப்பலில் இருந்தவர்களில் 14 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும், பத்து பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.

இந்த நிலையில் அவினாஷின் பெற்றோர்கள் அவர் வேலை செய்த தனியார் நிறுவனத்துக்குப் போன் செய்து கேட்டுள்ளனர். அவினாஷின் நிலை பற்றி முறையான எந்தத் தகவலும் இல்லை. இதற்கிடையில் கப்பல் விபத்து குறித்த தகவல் கேள்விப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து அவினாஷின் தந்தை சொந்த ஊருக்கு வந்துவிடுகிறார். தஞ்சாவூர் கலெக்டர், எம்.பி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் மகனின் நிலை என்ன என்றும் கண்டுபிடித்து தருமாறும் மனு அனுப்புகின்றனர். இதில் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை என வேதனையோடு தெரிவிக்கிறார்கள் பெற்றோர்கள்.

இது குறித்து அவினாஷின் அம்மா அல்லிராணியிடம் பேசினோம். ``என்ன மகன் சென்ற கப்பல் விபத்து ஏற்பட்டு 10 தினங்களுக்கு மேல் ஆகுது. தீ விபத்து ஏற்பட்டவுடன் 10 பேர் காற்று நிரப்பிய பலூன், குடிப்பதற்கு தண்ணீர், ஆபத்து காலங்களில் பசித்தால் சாப்பிடுவதற்கு பசி மாத்திரை எடுத்துக்கொண்டு கடலில் குதித்துள்ளனர். இதில் என் மகன் அவினாஷும் ஒருவர். இந்த நிலையில் கடலில் குதித்தவர்களின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. மகனை மீட்டு தர வேண்டும் என் அபல தரப்புக்கும் நாங்கள் மனு அனுப்பினோம். எந்தவித பதிலும் இல்லாததால் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மகனை மீட்டுத் தர வேண்டும் என ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்துள்ளோம். என் மகன் கப்பல் வேலைக்குச் சென்றதில் இருந்தே தினமும் என்னிடம் போன் செய்து அம்மா எப்படி இருக்க, சாப்பிட்டியாமா எனப் போன் செய்து கேட்டுவிடுவான். அவன் குரல் கேட்காமல் எனக்கு உலகமே இருண்டதுபோல் உள்ளது. 

ஆனால், இப்போது அவன் எங்கு இருக்கிறான், எந்த நிலையில் இருக்கிறான் எனத் தெரியவில்லை. ஒரு தாயாக என் மனது கிடந்து தவிக்கிறது. இதனால் எங்கள் வீட்டில் எல்லோரும்  உடல் நிலையும் பாதிக்கப்பட்டுவிட்டது. இப்போது என் மகன் செல்போனுக்கு ரிங்க் போகிறது. எஸ்.எம்.எஸ் அனுப்பினாலும் சென்றடைகிறது. ஆனால், போனை எடுத்து யாரும் பேசுவதில்லை. இப்போதைக்கு எங்களுக்கு இருக்கிற ஒரே ஆறுதல் மகனின் செல்போன் ரிங்க் ஆவதுதான். அந்த ரிங்கில்தான் எங்கள் உயிரும் அடங்கியிருக்கிறது. ஆனால், செல்போனின் ஐ.எம்.இ நம்பரை வைத்து செல்போன் எங்கு இருக்கிறது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே மத்திய அரசு இதில் தீவிரமாகக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து காணாமல்போன என் மகனுடன் சேர்த்து மற்றவர்களையும்  மீட்டு தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’’ எனத் தழுதழுத்தபடி தெரிவித்தார்.