Published:Updated:

பட்டாசு தயாரிப்பில் விதிமீறல் - தொழிலாளர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

விதிமீறல்

பட்டாசு தயாரிப்பில் விதிமீறல் - தொழிலாளர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
பட்டாசு தயாரிப்பில் விதிமீறல் - தொழிலாளர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

சாத்தூர் அருகே பட்டாசு உற்பத்தியில் விதிமீறல் நடந்ததால் தொழிலாளர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள திருநெல்வேலி மாவட்டத்துக்குட்பட்ட வரகனூர் கிராமத்தில் அய்யாச்சாமி (45) என்பவருக்கு சொந்தமான குணா பட்டாசுத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. டி.ஆர்.ஓ. உரிமம் பெற்றுள்ள இந்த ஆலையில் 5 அறைகள் உள்ளன. நேற்று காலை பட்டாசு தயாரிக்கும் பணியில் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது உராய்வு ஏற்பட்டு பட்டாசுகள் திடீரென வெடித்தன. அடுத்தடுத்த அறைகளில் இருந்த பட்டாசுகளிலும் தீப்பிடித்ததால் ஆலை முழுவதும் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 4 அறைகள் தரைமட்டமாயின. படுகாயமடைந்த தொழிலாளர்களை சக தொழிலாளர்கள் உள்ளே இருந்து மீட்டு வெளியேற்றினர்.

பின்னர் சிவகாசி, வெம்பக்கோட்டை, ராஜபாளையம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த வெடிவிபத்தில் தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். இந்த விபத்தில் வெம்பக்கோட்டையைச் சேர்ந்த நீதிராஜன், வரகனூரைச் சேர்ந்த மாரியம்மாள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் குகன்பாறையைச் சேர்ந்த குருவம்மாள், சங்கரேஸ்வரி, வரகனூரைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் உள்ளிட்ட 6 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், படுகாயமடைந்த தொழிலாளர்கள் அனைவரும் மிகவும் ஆபத்தான நிலையிலேயே உள்ளனர். வெடி விபத்தால் ஆலையைச் சுற்றிலும் புகைமண்டலம் போல காணப்பட்டது. தொழிலாளர்கள் கொண்டு வந்திருந்த சாப்பாட்டுக் கூடைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

டி.ஆர்.ஓ. உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் சீனி வெடி, குருவி வெடி போன்ற சாதாரண வெடிகளை மட்டுமே தயாரிக்க வேண்டும். ஆனால், இந்த ஆலையில் முழுவதும் பேன்ஸி ரக பட்டாசுகளே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 15 முதல் 20 தொழிலாளர்களுக்குள் மட்டுமே பணிபுரிய வேண்டும். ஆனால், நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆலையில் பணிபுரிந்துள்ளனர். அறைகளுக்கு வெளியே டெண்ட் அமைத்து தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்திக்கான மருந்து வாங்கி வரப்பட்டுள்ளது. ஏராளமான செடிகள் ஆலைக்கு உள்ளே இருந்ததால் எளிதாக அடுத்தடுத்த இடங்களுக்கு தீ பரவியுள்ளது. பட்டாசுத் தயாரிப்பில் ஆலை நிர்வாகம் விதிமுறைகளை முழுமையாக மீறியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் 100 நாள்களுக்கும் மேலாக மூடப்பட்டு வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதிகளவில் பட்டாசு உற்பத்தி செய்து லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் நலனை ஆலை நிர்வாகம் முற்றிலும் புறக்கணித்துள்ளது. அதன் விளைவுதான் இன்று இத்தனை தொழிலாளர்களின் உயிர் பறிபோயுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறும்போது, ``டி.ஆர்.ஓ. உரிமம் பெற்று ஆலை இயங்கி வருகிறது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 6 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. ஆலையில் ஏதேனும் விதிமீறல் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். விதிமீறல் இருந்தால் உரிமையாளர் மீதும், ஆலை மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.