Published:Updated:

பெங்களூரு விமானக்கண்காட்சியில் தீ விபத்துக்கு என்ன காரணம்?

பெங்களூரு விமானக்கண்காட்சியில் தீ விபத்துக்கு என்ன காரணம்?
பெங்களூரு விமானக்கண்காட்சியில் தீ விபத்துக்கு என்ன காரணம்?

பெங்களூருவில் நடைபெற்ற 12வது ஏரோ இந்தியா விமானக் கண்காட்சியில் கார் பார்க்கிங் ஏரியாவில் ஏற்பட்ட தீ விபத்தில், 277 கார்கள் எரிந்து சாம்பலாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலஹங்கா பகுதியில் ஜக்கூர் சர்வதேச விமான நிலையத்தில், கடந்த 20-ம் தேதி முதல் ஏரோ இந்தியா விமானக் கண்காட்சி மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் 5 நாட்கள் நடைபெற்று வருகின்றது. இந்த கண்காட்சியில் சர்வதேச அளவில் போர் விமானங்கள் கலந்து கொண்டு பல சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகின்றன. 24-ம் தேதியுடன் நிறைவடையும் இந்த கண்காட்சியில், 23, 24-ம் தேதி பொதுமக்கள் பார்வையிடலாம் என்பதால், நேற்று இந்தியா மற்றும் வெளி நாட்டைச் சேர்ந்த பலர் பார்வையாளர்களாக வந்து கலந்து கொண்டனர்.

 விமான கண்காட்சி நடைபெறும் இடத்திலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில், கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பாதுகாப்புப் பணிகளை மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் கவனித்து வருகின்றது. ஆனால், எளிதில் தீ பற்றக் கூடிய, புல்வெளி பகுதியில் எப்படி கார் பார்க்கிங் அமைக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

23-ம் தேதி நண்பகல் 11.55 மணிக்குப் புல்வெளியில் பட்ட சிறிய தீ பொறி சில நிமிடங்களில் காற்றின் வேகத்தில் பரவி, பார்க்கிங் ஏரியா முழுவதும் தீ பற்றி எரிய ஆரம்பித்துவிட்டது. இதில் 27 வாகனங்களில் பொருத்தப்பட்டு இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதால், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் தடுமாற்றத்தோடு தவித்து நின்றனர். இதனால் தீ அடுத்தடுத்த கார்களுக்கும் பரவியது. 

இந்த அசம்பாவிதத்தால், விமானக் கண்காட்சியை நிறுத்தப்பட்டது. தீ விபத்து குறித்து கண்காட்சியில் இருந்த பார்வையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் கார்களை மீட்க முயன்றனர். ஆனால், அது முடியாமல் போக கார்கள் தங்கள் கண் முன்பே பற்றி எரிவதை தாங்க முடியாமல் கண்ணீர் வடித்தனர் உரிமையாளர்கள். இந்த தீ விபத்திற்குக் காரணம், சிகரெட்டை பற்ற வைத்து, அதை அணைக்காமல் புல்வெளியில் போட்டதால் தீ பரவியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய விமானப் படை செய்தி தொடர்பாளர் அணுப் பானர்ஜி, ‘ தீ விபத்தில் 277 கார்கள் எரிந்துள்ளதாகவும், இந்த விபத்தில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், நாளைத் திட்டமிட்டபடி விமானக் கண்காட்சி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.விமானக் கண்காட்சி தொடங்குவதற்கு முன்னதாக 19-ம் தேதி சாகச பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு விமானங்கள் மோதி விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.