Published:Updated:

தலைகுப்புற கவிழ்ந்த கார் - உயிர் தப்பிய கள்ளக்குறிச்சி அ.தி.மு.க எம்.பி

விபத்து

தலைகுப்புற கவிழ்ந்த கார் - உயிர் தப்பிய கள்ளக்குறிச்சி அ.தி.மு.க எம்.பி
தலைகுப்புற கவிழ்ந்த கார் - உயிர் தப்பிய கள்ளக்குறிச்சி அ.தி.மு.க எம்.பி

சேலம் அண்ணாபூங்கா மணிமண்டபத்தில் உள்ள  ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு கள்ளக்குறிச்சி திரும்பி சென்று கொண்டிருந்த கள்ளக்குறிச்சி எம்.பி காமராஜின் கார் அயோத்தியாப்பட்டிணம் மின்னாம்பள்ளி அருகே கார் டயர் வெடித்து தலைகுப்புற விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் எம்.பி காமராஜ்  சிறு காயத்தோடு அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.

இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழாவை தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.கவினர் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். இதனால் முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம், அண்ணாபூங்காவில் அமைந்துள்ள ஜெயலலிதா மணி மண்டபத்தில் இருக்கும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைகளுக்கு தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூமாலை அணிவித்து மரியாதை செய்வதற்காக வந்திருந்தார்.

அமைச்சர் கலந்து கொள்ளும் இந்த அரசு விழாவில் பங்கேற்க சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரம், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ், எம்.எல்.ஏகள் வெங்கடாசலம், சக்திவேல், செம்மலை, மனோன்மணி, சித்ரா உட்படப் பலரும் கலந்து கொண்டார்கள். அனைவரும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் கள்ளக்குறிச்சி எம்.பி காமராஜூம் தன் காரின் ஊருக்கு புறப்பட்டு சென்றார். அப்போது சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளி அருகே சென்று கொண்டிருக்கும் போது எம்.பி காமராஜின் பயணித்த காரின் டயர் வெடித்து விபத்திற்குள்ளாகி நிலை தடுமாறியது. இதையடுத்து டிரைவர் பிரேக் அடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து கார் தலைக்குப்புற கவிழ்ந்தது. காருக்குள் இருந்த எம்.பி காமராஜ் அடியில் மாட்டிக் கொண்டார். அருகே இருந்தவர்கள் ஓடி வந்து எம்.பி காமராஜை மீட்டு அருகே உள்ள ஜே.ஜே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். கையில் சிறிய காயம் ஏற்பட்டிருந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு மற்றொரு காரில் ஊருக்கு புறப்பட்டார்.

கடந்த வாரம் திண்டிவனம் எம்.பி இராஜேந்திரன் கார் விபத்துக்குளாகி மரணம் அடைந்த பீதி இன்னும் விலகாத நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி எம்.பி காமராஜ் கார் விபத்துக்குள்ளாகி இருப்பது  அ.தி.மு.க வினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.