Published:Updated:

தேசிய நெடுஞ்சாலையில் தீ பற்றி எரிந்த கார்

தேசிய நெடுஞ்சாலையில் தீ பற்றி எரிந்த  கார்
தேசிய நெடுஞ்சாலையில் தீ பற்றி எரிந்த கார்

தர்மபுரி: தேசிய நெடுஞ்சாலையில் தீபற்றி எரிந்த காரால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு ‘ஃபோர்டு ஐகான்’ கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் பூரிக்கல் என்ற இடத்தில் அந்த கார் வந்தபோது காரில் என்ஜின் பகுதியில் இருந்து புகை கிளம்பி இருக்கிறது. உடனே காரை ஓரம்கட்டி நிறுத்தி சோதித்தபோது, அதிக வெப்பமும் தீ பரவும் சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் காரில் இருந்த அனைவரையும் ஓட்டுனர் அவசர அவசரமாக கீழே இறங்க சொல்லி இருக்கிறார்.

தேசிய நெடுஞ்சாலையில் தீ பற்றி எரிந்த  கார்

காரில் இருந்த எல்லோரும் இறங்கிய சிறிந்து நேரத்திற்கெல்லாம் பலமாக தீப்பிடித்த கார் நெடுஞ்சாலை ஓரத்திலேயே கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

காருக்குள் வீட்டு பயன்பாட்டிற்காக சிலிண்டர் ஒன்று எடுத்து செல்லப்பட்டிருக்கிறது. நல்ல வேளையாக அது காலி சிலிண்டர் என்பதால், வெடித்து சிதறி பெரும் விபத்தை ஏற்படுத்தாமல் இருந்திருக்கிறது.

தொப்பூர் போலீசாரின் விசாரணையில், இந்த விபத்து காரின் என்ஜின் பகுதியில் இருந்து மின் கசிவால் ஏற்பட்ட தீ பரவல் தான் கார் தீப்பிடிக்க காரணம் என்று தெரிய வந்திருக்கிறது.

இதற்கிடையில் தொப்பூர் வனம் அடங்கிய கணவாய் பகுதியில் வாகனங்கள் தீ விபத்தில் சிக்குவதும், கேஸ் ஏற்றி செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் உருளுவதும் அடிக்கடி ஏற்படுகிறது. இந்த வனப் பகுதியில் நிரந்தரமாக தீயணைப்பு வாகனம் ஒன்றை தயார் நிலையில் நிறுத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

##~~##
இப்படி நிறுத்துவதன் மூலம் வாகனங்களில் ஏற்படும் தீ விபத்து வனப் பகுதிக்குள் பரவி பெரிய அளவில் காட்டுத் தீ ஏற்படாதவாறு தடுக்க உதவியாக இருக்கும் என்பதும் இவர்களின் கருத்தாக இருக்கிறது.
எஸ்.ராஜாசெல்லம்