Published:Updated:

தொண்டி அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி: சினிமா பார்த்துவிட்டு திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்

தொண்டி அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி: சினிமா பார்த்துவிட்டு திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்
தொண்டி அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி: சினிமா பார்த்துவிட்டு திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்

 ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே, கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள நம்புதாளை பகுதியில், டாடா மேஜிக் காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த 3 பேர் பலியாகினர். 3 பேர் பலத்த காயத்துடன் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே, கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள நம்புதாளை பகுதியில், ராமநாதபுரத்திலிருந்து வந்து கொண்டிருந்த டாடா மேஜிக் காரும், சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கி வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்தும்  நேருக்கு நேர் மோதியது.  இதில், காரில் பயணம் செய்த 6 பேரில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர், பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற தொண்டி போலீஸார், பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மூன்று பேரை காரில் இருந்து  மீட்டு, சிகிச்சைக்காக  ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இந்த விபத்தில், தொண்டியைச் சேர்ந்த அப்துல்கலாம் ஆசாத் (23), செய்யது இபுராகிம் (30) மற்றும் மணக்குடியைச் சேர்ந்த கருப்பையா (25). ஆகிய மூன்று பேரும் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த தொண்டியைச் சேர்ந்த  முகம்மது ரிபாக், முகம்மது அப்ரித், அஸ்பாக் ஆகிய மூவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

விபத்துகுறித்து போலீஸார் விசாரணையில், காரில் பயணம் செய்த 6 பேரும் ராமநாதபுரத்தில் நேற்று இரவு சினிமா பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பிவந்தபோது, இந்தக் கோர விபத்து ஏற்பட்டுள்ளது எனத் தெரியவந்தது. விபத்துகுறித்து தொண்டி காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். 
 

ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த 3 நாள்களில் நடந்த சாலை விபத்துகளில், 10-க்கும் மேற்பட்டவர்கள்  தொடர்ச்சியாகப் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம் மாவட்டத்தில், நள்ளிரவு நேரங்களில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு இரவு நேரங்களில் போலீஸார் தேநீர் வழங்கிவந்தனர். மேலும், பல்வேறு சாலைகளில் வேகத்தடுப்புகளும் வைத்துள்ளனர். இதனால், விபத்துகள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுவந்ததால், நள்ளிரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு தேநீர் கொடுப்பது நிறுத்தப்பட்டது. பல்வேறு பணிச்சுமையினால் போலீஸாரின் இரவு ரோந்து பணிகளும் குறைந்துவிட்டதால், இப்போது விபத்துகள் அதிகரிக்கத்துவருகிறது.