Published:Updated:

``ஊசிகூட போடாமல் என் மகனின் விரல்களை வெட்டினார்கள்!” - பரிதவிக்கும் பஞ்சாலை தொழிலாளி தம்பதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``ஊசிகூட போடாமல் என் மகனின் விரல்களை வெட்டினார்கள்!” - பரிதவிக்கும் பஞ்சாலை தொழிலாளி தம்பதி
``ஊசிகூட போடாமல் என் மகனின் விரல்களை வெட்டினார்கள்!” - பரிதவிக்கும் பஞ்சாலை தொழிலாளி தம்பதி

``நடந்திருப்பது பெரும் துயரம். நான்கு வயதுக் குழந்தையின் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கிறது. விரல்கள் இல்லாமல் அந்தக் குழந்தை வாழ்நாள் முழுக்க அனுபவிக்கப் போகிற கஷ்டத்தை எப்படி ஈடு செய்ய முடியும்?"

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

லது கையில் பெரிய கட்டுடன் ஹேமாவின் இடுப்பில் அமர்ந்திருக்கிறான் ரித்தீஷ் பாண்டி. நான்கு வயதே ஆன அந்தச் சிறுவன், தனது வலது கையில் நான்கு விரல்கள் துண்டிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவன் அம்மா ஹேமாவுக்கும் அப்பா முருகேசனுக்கும்கூட, தங்கள் பிள்ளை இழந்த விரல்களை இனி மீட்க முடியாது என்கிற உண்மை பிடிபடவில்லை. ஏதுமறியா ஏழைத்தொழிலாளிகளான முருகேசனும், ஹேமாவும் எப்படியாவது தங்கள் குழந்தையின் துண்டிக்கப்பட்ட விரல்களை மீண்டும் ஒட்ட வைத்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் கோவை ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்து நின்ற காட்சி... விவரிக்க முடியாத துயரத்தின் சாட்சி!

ஹேமாவுக்கு சொந்த ஊர் கும்பகோணம். முருகேசன் திண்டுக்கல் பக்கம் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். குடும்ப வறுமை இருவரையும் கோயம்புத்தூருக்கு அழைத்து வந்தது. பஞ்சாலையில் வேலை பார்க்கும்போது இருவருக்குள்ளும் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது. உழைப்பைத் தவிர வேறெந்த சொத்தும் இல்லாத இவர்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு பெருஞ்சொத்தாக பிறந்தான் ரித்திஷ் பாண்டி.

கோவை கலெக்டர் அலுவலகத்தில், கையில் மனுவோடும் இடுப்பில் மகனோடும் கண்ணில் நீர் தழும்ப நின்றுகொண்டிருந்த ஹேமாவிடம் பேசினோம், ``எனக்குச் சொந்த ஊரு கும்பகோணம்ங்க... ஆறு பெண், ஒரு ஆண் என மொத்தம் எங்க வீட்ல ஏழுபேர். கஷ்டத்திலும் என்னைப் படிக்க வெச்சிரணும்’னு எங்க அம்மா அப்பா நினைச்சாங்க. நானும் முட்டிமோதி பத்தாவது வரைக்கும் படிச்சேன். அதுக்கும் மேல முடியலை. படிப்பு ஏறலை. வீட்டிலும் வறுமை தாண்டவமாட ஆரம்பிச்சுருச்சு. நானும் என்னோட அக்காவும் உடுமலையில உள்ள ஒரு பஞ்சாலையில வேலைக்குச் சேர்ந்தோம். மூணு வருஷம் அங்கே வேலை பார்த்தோம். அடுத்து கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு பஞ்சாலையில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கதான்  என்  வீட்டுக்காரரைப் பார்த்தேன். அவரும் என்னைப் போல, குடும்பச் சூழல்கொண்டவர்தான். ரெண்டுபேரும் காதலிச்சு திருமணம் செஞ்சிக்கிட்டோம். முதல் பிரசவத்துல ஒரு ஆண் குழந்தை ஏழு மாசத்துலயே பிறந்து இறந்துருச்சு. அதுல நாங்க ரொம்பவே சுணங்கிட்டோம். அடுத்த குழந்தையாவது நல்லபடியா பிறக்கணும்’னு நாங்க வேண்டாத சாமி இல்லை. நாங்க வேண்டினது வீண் போகலை. அடுத்த வருஷமே ரித்திஷ் பாண்டி நல்லபடியா பிறந்தான். அவன்தான் எங்களோட வாழ்க்கையின் ஒரே ஆதாரம். அவனை நல்லா படிக்க வெச்சு பெரிய ஆளா ஆக்கணும்னு கனவு கண்டுக்கிட்டு இருந்தேன். ஆனா.... “ அதற்கு மேல் தொடர முடியாமல் தன் குழந்தையை நெஞ்சில் புதைத்துக்கொண்டு ஹேமா கண்ணீர் விட..

விக்கித்துப்போய் நின்ற முருகேசன் நடந்ததை விவரிக்க ஆரம்பித்தார். ``கம்பெனி கம்பெனியா மாறிகிட்டு இருக்கிறதுதான எங்க பொழப்பு. சோமனூருக்கு பக்கத்தில் உள்ள ஊஞ்சல் பாளையத்தில் இருக்கிற 'சிந்து பிரியா’ங்கிற ஸ்பின்னிங் மில்லில் ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் நாங்க வேலைக்குச் சேர்ந்தோம். ஒரு நாளைக்கு ஆளுக்கு 300 ரூபாய் சம்பளம். மில்லுக்குப் பக்கத்துலேயே தங்குறதுக்கு வீடும் கொடுத்திருவாங்க.  நான் நைட் டியூட்டி. ஹேமா பகல் டியூட்டி. குழந்தையைப் பார்த்துக்க ஒரு ஆள் வீட்ல இருந்துட்டே இருப்போம். கடந்த 6-ம் தேதி, நான் நைட் டியூட்டி பார்த்துட்டு வந்து உடம்பு வலியில கண் அசந்துட்டேன். வீட்டில் விளையாடிட்டு இருந்த பையன் அம்மாவைத் தேடி மில்லுக்கு ஓடியிருக்கான். அவனை யாரும் பாக்கலை போல, இவன் ஓடிட்டு இருந்த மிஷினில் கையை வெச்சுட்டான். பிஞ்சு கை நஞ்சுருச்சு. வலியில இவன் அலறின பிறகுதான் எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கு. எல்லாரும் கத்தினாங்க. நான் ஓடி பார்த்தா பையன் கையிலிருந்து ரத்தம் ஒழுகிட்டே இருக்கு. நாலு விரலும் தனியா தொங்குச்சு, அதைக் கண்கொண்டு பார்க்கவே முடியலை. 

நெஞ்செல்லாம் படபடக்க ஆரம்பிச்சுருச்சு... எப்படியாவது எம் பையன் கைய காப்பாத்துங்க’ன்னு கதறினோம். ஆனால், ஜி.ஹெச்-க்கு கொண்டுபோனால், போலீஸ் கேஸ் ஆகிரும்’னு மில்லுகாரங்க வேணாம்’னு சொல்லிட்டாங்க. என் ஆயுசுக்கும் உங்ககிட்ட வேலை செஞ்சாவது உங்க கடனை அடைச்சுடுறேன். கங்கா ஆஸ்பத்திரி மாதிரி ஏதாச்சு பெரிய பிரைவேட் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போங்க’னு கெஞ்சினோம். `அங்கெல்லாம் போக முடியாது. அங்கெல்லாம் போனால் பல லட்சங்கள் செலவாகும்’னு  மேனேஜர் மனோகர் சொல்லிட்டார். பக்கத்தில பிரேமான்னு ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போனாங்க. சம்பவம் 3 மணிக்கு நடந்துச்சு. கால் மணி நேரத்தில், நாங்க அங்க போய்ட்டோம். ஆனால், அப்போ அங்க டாக்டரே இல்லை. என் தோளில் பிள்ளையைப் போட்டுருக்கேன். ரத்தம் ஒழுகிட்டே இருக்கு. வேற ஆஸ்பத்திரிக்குப் போகலாம் சார்’னு துடிச்சோம். ஆனால், அப்பவும் நிர்வாகத்திலிருந்தவர்கள் மனசு இறங்கலை. 6 மணிக்கு டாக்டர் வந்தார். ஒரு  ஊசிகூட போடலை. பெரு விரலைத் தவிர மத்த நாலு விரலையும் வெட்டி எடுத்துட்டாங்க. பையன் எப்படித் துடிச்சான் தெரியுமா?’ எங்களுக்கு உயிரே போயிருச்சு. மருத்துவச் செலவுக்கு  நிறுவனத்திலிருந்து பத்தாயிரம் ரூபாய் மட்டும்தான் கொடுத்தாங்க. நிறைய செலவு பண்ணினா என் பையனுக்கு மறுபடியும் விரலை ஒட்ட வெச்சுரலாமாமே... அதனாலதான் கலெக்டர்கிட்ட மனுகொடுக்க வந்தோம்..." என்று அப்பாவியாகச் சொன்னவரிடம், அதற்கான வாய்ப்பு இல்லை என்று சுற்றி நின்றவர்கள் சொன்னதும் இதயம் நொறுங்கிப் போனார். "விரல்களை ஒட்ட வெச்சிரலாம்னு சொன்னாங்களே சார்..." எனத் தனக்குள்ளேயே  புலம்ப ஆரம்பித்தவர், "கையில விரல் இல்லைன்னா கையே இல்லாததுக்கு சமமாச்சே... இவன் எதிர்காலமே போச்சே சார்..." என்று கலங்கிய கண்களோடு  முருகேசன் நிற்க...  ஏதுமறியாமல் சிரிக்கிறான் சிறுவன் ரித்திஷ் பாண்டி.

இது தொடர்பாக சிந்துபிரியா ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டோம்,  துரை மணி என்பவர் பேசினார். ``சம்பவம் நடந்த உடனே குழந்தையை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துக்கொண்டு போயிட்டோம். உடனே ட்ரீட்மென்ட் எடுத்தாங்க சார்.... நீங்க வேண்டுமானால் முருகேசனிடம் கேட்டுப்பாருங்கள்'' என்றார். நம்மிடம் முருகேசன் சொன்னவற்றைச் சொன்னோம். "அது என்னான்னு எனக்குத் தெரியலை சார். ஆரம்பத்தில் நான் இல்லை. மனோகர்தான் இருந்தார். அவர் இப்போ வேலையைவிட்டுப் போய்ட்டார். பாதிக்கப்பட்ட குழந்தையின் மருத்துவச் செலவுகளை முழுமையாக நிர்வாகமே ஏற்றுக்கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்” என்பதோடு முடித்துக்கொண்டார்.

இதுதொடர்பாக பஞ்சாலை தொழிலாளர் சங்க பொதுச்செயலாளரான சி.பத்மநாபனிடம் பேசினோம், ``நடந்திருப்பது பெரும் துயரம். நான்கு வயதுக் குழந்தையின் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கிறது. விரல்கள் இல்லாமல் அந்தக் குழந்தை வாழ்நாள் முழுக்க அனுபவிக்கப் போகிற கஷ்டத்தை எப்படி ஈடு செய்ய முடியும்? இந்த நிறுவனம் மட்டுமல்ல கோவையில் உள்ள பெரும்பாலான பஞ்சாலை நிறுவனங்கள் இதுபோன்ற தொழிற்சாலை விபத்துகள் நடந்தால் காவல்துறைக்கு தகவலே சொல்வது கிடையாது. ஏதாவது ஒரு மருத்துவமனையோடு உடன்படிக்கை செய்துகொண்டு அங்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கிறார்கள். அங்கு அந்த சிகிச்சைக்கான வசதி இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் கணக்கில்லை. மருத்துவமனையில் சேர்த்தோம் என்று தொழிலாளிகளை நம்ப வைக்க வேண்டும்; போலீஸில் வழக்கு பதிவாகி பெரிய இழப்பீடுகள் கொடுக்கும் நிலைக்குச் செல்லக்கூடாது என்பதுதான் அவர்களின் நோக்கம். நிர்வாகம் நினைத்திருந்தால் குழந்தையின் கையைக் காப்பாற்றியிருக்க முடியும். அதற்கான மருத்துவ வசதிகள் கோவையில் இருக்கின்றன. ஆனால், அவர்களுக்கு லாபம் மட்டுமே முக்கியம். தொழிலாளர்கள் எக்கேடுகெட்டுப் போனால் என்ன என்று நினைக்கிறார்கள். விரல்களை இழந்த குழந்தைக்கு மருத்துவச் செலவை மட்டும் ஏற்கிறோம் என்பது ஏமாற்று வேலை. குழந்தைக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் இல்லையெனில் நாங்கள் சும்மா விடமாட்டோம்” என்றார் கொந்தளிப்போடு. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு