Published:Updated:

நெல்லை அருகே பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து - ரூ.80 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்!

நெல்லை அருகே பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து -  ரூ.80 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்!
நெல்லை அருகே பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து - ரூ.80 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்!

நெல்லையை அடுத்த ராமையன்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டதில், பேப்பரை பண்டல் போடும் இயந்திரம் உள்ளிட்ட 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலாகின. 

நெல்லை அருகே பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து -  ரூ.80 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்!

நெல்லை, தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜ். இவருக்குச் சொந்தமான பழைய பேப்பர் குடோன் ராமையன்பட்டி- டவுன் சாலையில் உள்ளது. அங்கு பழைய பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிக்கப்பட்டுக் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அங்கு அவை தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு பேப்பர் மில் மற்றும் பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தன. 

அங்குள்ள பழைய பேப்பர்கள், இயந்திரங்கள் மூலம் பண்டல் செய்யப்பட்டு டன் கணக்கில் அனுப்பப்பட்டன. அதே போன்று பழைய பிளாஸ்டிக் பொருள்களும் இயந்திரங்களின் உதவியுடன் பேக்கிங் செய்யப்பட்டன. இந்தப் பணிகள் இன்று நடைபெற்று வந்த நிலையில், திடீரென பேப்பர்களில் தீப்பற்றியது. 

அப்போது அங்கு பணியில் இருந்த பணியாளர்கள் உடனடியாக வெளியேறினார்கள். தென் மேற்குப் பருவக் காற்று வீசத்தொடங்கியிருப்பதால் காற்றின் வேகத்தில் தீ வேகமாகப் பரவி குடோன் முழுவதும் சூழ்ந்தது. அதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இது பற்றி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதால் பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடினார்கள். 

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக தீயணைப்புப் படையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதற்குள்ளாக குடோனில் இருந்த பண்டல் போடும் இயந்திரம், டன் கணக்கிலான பழைய பேப்பர்கள், பிளாஸ்டிக் பொருள்கள், ஜெனரேட்டர் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. குடோனில் எரிந்து பொருள்களின் சேத மதிப்பு சுமார் 80 லட்சம் ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

குடோன் அருகில் உள்ள வயல் பகுதியில் வைக்கப்பட்ட தீ காற்றின் வேகத்தில் பரவி குடோனுக்குள்ளும் வந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ஒருவேளை மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்தும் தச்சநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vikatan