Published:Updated:

கும்பகோணம் தீ விபத்து: `இருந்திருந்தா மரம்போல எங்களைக் காத்திருப்பியே!’ - கதறிய பெற்றோர்

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகள்
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகள் ( ம.அரவிந்த் )

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் நினைவாகப் பாலக்கரையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுப் பூங்காவுக்கும் சென்ற பெற்றோர்கள், மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் சில நிமிடங்கள் மெளன அஞ்சலியும் கடைப்பிடித்தனர்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் சிக்கி 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இதன் 16-ம் ஆண்டு நினைவு தினமான இன்று தீயின் கோர தாண்டவத்துக்கு குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்கள், பள்ளியின் முன் திரண்டு கதறியபடி குழந்தைகளின் போட்டோக்கள் மீது மலர் தூவி அஞ்சலி செலுத்தியது சோகத்தை ஏற்படுத்தியது.

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகள்
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகள்

கும்பகோணம் காசிராமன் தெருவில் செயல்பட்டு வந்த அரசு உதவி பெறும் பள்ளியான கிருஷ்ணா தொடக்கப் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி 94 குழந்தைகள் உயிரிழந்தனர். உலகையே உலுக்கி இந்தச் சம்பவம் பலரையும் கலங்கடித்ததுடன், இன்று வரை நீங்கா வடுவாகவும் இருந்து வருகிறது. இதன் 16-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் இன்று தங்கள் வீடுகளில் தீ விபத்தில் இறந்த தங்கள் குழந்தைகளின் போட்டோக்களுக்கு மாலையிட்டதுடன், பிடித்தமான உணவு உள்ளிட்ட பொருள்களைப் படையலிட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து தீ விபத்து ஏற்பட்ட பள்ளிக்கு முன் சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த 94 குழந்தைகளின் போட்டோக்கள் மீது மலர்தூவி நினைவு அஞ்சலி செலுத்தினர்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து
கும்பகோணம் பள்ளி தீ விபத்து

அப்போது சில பெற்றோர் தங்கள் குழந்தைகளின் போட்டோவை தொட்டுப் பார்த்தும், தங்கள் முகத்தைப் புதைத்தும், `இந்நேரம் நீ இருந்திருந்தா உனக்கு 25 வயசுக்கு மேல் ஆகியியிருக்கும். ஒரு மரம் போல் எங்களையும் காக்கத் தொடங்கியிருப்பாய். ஆனால், எங்களைத் தவிக்க வைத்துவிட்டு சென்றுவிட்டாய். நீ கரிக்கட்டையாகக் கிடந்தது, இன்னும் கண்முன்னேயே நின்று துளைத்தெடுக்கிறது’’ எனக் கதறினர். இதைப் பார்த்த பலருக்கும் தங்களை அறியமல் கண்கள் கசியத் தொடங்கியதுடன் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதற்கு முன்னதாகக் கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன் உள்ளிட்ட பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து இறந்த 94 குழந்தைகளின் நினைவாகப் பாலக்கரையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுப் பூங்காவுக்கும் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் சில நிமிடங்கள் மெளன அஞ்சலியும் கடைப்பிடித்தனர். சம்பவம் நடைபெற்று 15 ஆண்டுகளை கடந்தும் குழந்தைகளைப் பறி கொடுத்த பெற்றோர்களின் முகத்தில் அந்தச் சோகம் கொஞ்சம்கூட அகலவில்லை.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து
கும்பகோணம் பள்ளி தீ விபத்து

இதுகுறித்து பெற்றோர்கள் சிலரிடம் பேசினோம். ``காலையில் மொட்டுபோல பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பியபோது அவர்கள் கருகி திரும்பி வருவார்கள் என எங்களுக்குத் தெரியாது. பள்ளியில் தீப்பற்றி எரிகிறது என்றதும், சின்ன விபத்தாகத்தான் இருக்கும். எந்தக் குழந்தைக்கும் எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்ற பதைபதைப்புடன் பள்ளிக்கு ஓடி வந்தோம்.

Vikatan

அங்கு சென்றதும்தான் தீயின் கோரப்பசியில் சிக்கி 94 குழந்தைகள் உயிரிழந்துவிட்டன எனத் தெரிந்தது. இதைக்கேட்ட பல பெற்றோர், அங்கேயே மயங்கி விழுந்தனர். கும்பகோணம் முழுவதும் அழுகை சத்தம் ஒலித்துக்கொண்டே இருந்தது. இளம் பிஞ்சுகளை விழுங்க, அந்தத் தீக்கு எப்படித்தான் மனசு வந்தது எனத் தெரியவில்லை. இன்றைக்கும் நாங்க நடைபிணமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்’’ என்றனர்.

அஞ்சலி செலுத்தும் பெற்றோர்
அஞ்சலி செலுத்தும் பெற்றோர்

விபத்தில் குழந்தைகளைப் பறிகொடுத்த இன்பராஜ் என்பவரிடம் பேசினோம். ``கொரோனா பரவுதலைத் தடுப்பதற்காகத் தனித் தனி குடும்பமாக வந்து அஞ்சலி செலுத்துங்கள் என அறிவுறத்தப்பட்டிருந்தது. அதைக் கடைப்பிடித்து அஞ்சலி செலுத்தினோம். நான் அன்றைய தினம் என் பிள்ளைகளை கொண்டு வந்துவிட்டேன். அவர்கள் எனக்கு டாட்டா காட்டிவிட்டு சென்றனர். அந்த நாள்தான் அவர்கள் வாழப்போற கடைசி நாள் என எனக்கு அப்போது தெரியவில்லை. அந்த வலி மனதைவிட்டு மறைய மறுக்கிறது.

Vikatan

இதுபோன்ற சம்பவம் எந்தப் பெற்றோருக்கும் வரக் கூடாது. இதனால் ஒவ்வோர் ஆண்டும் இந்த நாளை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கிறோம். அதைச் செயல்படுத்த வேண்டும் என 94 குழந்தைகளின் நினைவாகக் கேட்டுக்கொள்கிறோம். இதைச் செய்தால் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்’’ எனக் கலங்கியவாறு தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு