கேரளாவில் செல்ஃபி மூலம் இருவரது உயிர்கள் காப்பாற்றப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒரு செல்ஃபி உயிரைக்கூடப் பறிக்கும் என்பதற்கு இந்தியாவில் நிகழ்ந்த ஏராளமான சம்பவங்களை உதாரணமாகச் சொல்லமுடியும். இதனால் பல விபத்துகளும் நடக்கின்றன. ஆனால், கேரளாவில் நிகழ்ந்த சம்பவம், இந்த `ஸ்டீரியோடைப்பை’ மாற்றியுள்ளது. மத்திய கேரளாவான கோட்டயம் மாவட்டத்தில், சங்கநேசரி என்ற இடத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தில், தனது மனைவியுடன் தலைவைத்து படுத்துக்கொண்டு, `நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்’ என்று கூறி, நண்பர்களுக்கு செல்ஃபி எடுத்து அனுப்பியுள்ளார் ஒருவர்.

இந்த செல்ஃபியைக்கண்ட அவரது நண்பர்கள் அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்தனர். அந்த நபர் அனுப்பிய செல்ஃபியை ஜூம் செய்த போது, தண்டவாளத்துக்கு அருகிலிருந்த மஞ்சள் நிற மைல்ஸ்டோன் கல் தெரிந்தது. அதிலிருக்கும் எண்ணை வைத்துக்கொண்டு, அந்த இடம் எங்கே இருக்கிறது என்பதை அறிந்துகொண்டனர். கேரளா எக்ஸ்பிரஸில் பயணம் செய்துகொண்டிருந்த அவரது நண்பர் ஒருவர், இதைக் கேள்விப்பட்டதும், உடனடியாக ஓடிச்சென்று, அந்த ரயிலின் ஓட்டுநரிடம், `சம்பவம் மற்றும் அந்த இடத்தைக் குறிப்பிட்டு, அவ்வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களையும் மெதுவாகச் செல்லுமாறு அறிவுறுத்த கேட்டுக்கொண்டார். இதனிடையே சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டு, தற்கொலை செய்ய முயன்ற நபர் மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்தால் கோபமடைந்த ரயில்வே அதிகாரிகள், இதுபோல இன்னொரு முறை செய்யமாட்டோம் என்று உறுதியளித்த பின் விடுவித்தனர். அவமானம் கருதி அவர்கள் பெயர் மற்றும் இதர தகவல்களை காவல்துறையினர் வெளியிடவில்லை. கடந்தாண்டு ஹைதராபாத்தில் ரயில்வே டிராக் அருகில் நின்றுகொண்டிருந்த நபர் செல்ஃபி எடுக்க முயன்றபோது அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் உயிர்தப்பினார். அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 2011 முதல் 2017 வரையிலான காலக்கட்டத்தில் 259 பேர் செல்ஃபியால் விபத்து மற்றும் உயிரிழப்புகளுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.