Published:Updated:

சென்னை: சார்ஜரில் செல்போன்... சிறுவனின் உயிரைப் பறித்த அழைப்பு!

செல்போன் சார்ஜர்
செல்போன் சார்ஜர் ( representational image )

செல்போனை சார்ஜரில் போட்டுவிட்டு சிறுவன் குளிக்கச் சென்றார். அப்போது செல்போனுக்கு அழைப்பு வர, அதை எடுத்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகராசா. இவரின் மனைவி சரஸ்வதி. இந்தத் தம்பதியரின் இரண்டாவது மகன் சஞ்சய் (17). ப்ளஸ் டூ படித்த சஞ்சய் வேலை தேடி சென்னைக்கு வந்தார். சென்னை, கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி 1-வது தெருவிலுள்ள வீட்டில் தங்கி ஹோட்டலில் வேலை பார்த்தார்.

மின்சாரம்
மின்சாரம்
representational image

சம்பவத்தன்று சஞ்சய்யுடன் தங்கியிருந்தவர்கள் வேலைக்குச் சென்றுவிட்டனர். அதனால் அவர் மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். அப்போது சஞ்சய், தன் செல்போனை சார்ஜரில் போட்டுவிட்டுக் குளிக்கச் சென்றார். அப்போது அவரின் செல்போனுக்கு அழைப்பு வந்திருக்கிறது. உடனே குளித்துக்கொண்டிருந்த சஞ்சய், செல்போனை எடுத்திருக்கிறார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அதனால் தூக்கி வீசப்பட்ட சஞ்சய் மூச்சுப் பேச்சில்லாமல் மயங்கிக் கிடந்தார்.

சிறுவன் சஞ்சய் விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அங்கு வந்தனர். உடனடியாக சிறுவனை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், சஞ்சய் மின்சாரம் தாக்கி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் நண்பர்கள், காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்காமல் அவரின் சடலத்தைச் சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.

சடலம்
சடலம்
representational image

இதற்கிடையில் தனியார் மருத்துவமனையிலிருந்து கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு இது குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுவனின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். சார்ஜரில் போடப்பட்டிருந்த செல்போனை ஈரக் கையால் சஞ்சய் எடுத்தபோதுதான் மின்சாரம் அவரைத் தாக்கியிருக்கிறது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு