Published:Updated:

மாணவனின் தலையில் மோதிய 3 கிலோ இரும்புக் குண்டு! - மூளைக் காயத்தால் கேரளாவில் நேர்ந்த துயரம்

`ஹேமர் த்ரோ' போட்டியாளரால் வீசப்பட்ட 3 கிலோ எடையுள்ள இரும்புக் குண்டு எதிரே பணியில் ஈடுபட்டிருந்த அபீலின் தலையில் பெரும் வேகத்துடன் மோதியது.

Athletics Competition
Athletics Competition ( pixabay )

`விளையாட்டு வினையானது' என்பார்கள். கேரளாவில் நடைபெற்ற ஒரு விளையாட்டுப் போட்டியின்போது ஏற்பட்ட கவனக்குறைவால் 17 வயது பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Spear throwing
Spear throwing
pixabay

கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் குறிஞ்சான்குளத்தில் அபீல் ஜான்சன் என்ற 17 வயது இளைஞர், தந்தை ஜார்ஜ் ஜான்சன் மற்றும் தாய் டார்லியுடன் வசித்துவந்தார். அப்பகுதியில் பாலா என்ற இடத்தில் உள்ள செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த அபீல், பாலாவில் நடைபெற்ற கேரள மாநில ஜூனியர் தடகளப் போட்டியில் தன்னார்வலராகச் செயல்பட்டு வந்தார். கடந்த 4-ம் தேதி நடைபெற்ற தடகளப் போட்டியில் ஈட்டி எறிதல் மற்றும் `ஹேமர் த்ரோ' பிரிவில் தன்னார்வப் பணியில் ஈடுபட்டிருந்த அபீல், போட்டியாளர்களால் வீசப்பட்ட ஈட்டிகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது `ஹேமர் த்ரோ' போட்டியாளரால் வீசப்பட்ட 3 கிலோ எடையுள்ள இரும்புக் குண்டு எதிரே பணியில் ஈடுபட்டிருந்த அபீலின் தலையில் பெரும் வேகத்துடன் மோதியது. இரும்புக் குண்டு மோதிய வேகத்தில் மூளையில் காயம் ஏற்பட்ட நிலையில், அவர் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவந்த அபீல் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அவரின் குடும்பத்தினரைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

hammer throwing
hammer throwing
pixabay

இந்தத் துயர சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், `அபீல் ஜான்சனின் இறப்பு மிகவும் வேதனையளிக்கிறது. இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். அபீலின் குடும்பத்தினரின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

அபீல் மரணம் தொடர்பாகப் பேசும் கேரள காவல்துறையினர், ``இந்த நிகழ்வின் அமைப்பாளர்கள் மீது சட்டப் பிரிவு 338-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கவனக்குறைவு எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்கின்றனர்.

Pinarayi Vijayan
Pinarayi Vijayan

போதுமான அளவு பாதுகாப்பு எதுவுமின்றி போட்டி நடத்தியதே இந்த விபத்துக்குக் காரணம் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதைத் தொடர்ந்து கேரள ஜூனியர் தடகளப் போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.