Published:Updated:

'ஹெல்மெட்' அணியாத 1,844 பேர் பலி - 9 மாத சாலை விபத்துகளில் சோகம்!

சாலை விபத்து

தமிழகத்தில் கடந்த, 9 மாதங்களில் நடந்த, 48,438 சாலை விபத்துகளில், 'ஹெல்மெட்' அணியாத, 1,844 பேர் பலியாகியிருக்கின்றனர்.

'ஹெல்மெட்' அணியாத 1,844 பேர் பலி - 9 மாத சாலை விபத்துகளில் சோகம்!

தமிழகத்தில் கடந்த, 9 மாதங்களில் நடந்த, 48,438 சாலை விபத்துகளில், 'ஹெல்மெட்' அணியாத, 1,844 பேர் பலியாகியிருக்கின்றனர்.

Published:Updated:
சாலை விபத்து

தமிழகத்தில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால் ஒருபுறம் சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களின் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. மறுபுறம் போக்குவரத்து விதிமுறைகளைப் பலரும் கடைப்பிடிக்காமல் வாகனங்களை இயக்குவதால் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன.

இதற்கு 'ஹெல்மெட்' அணியாதது, 'சீட் பெல்ட்' போடாதது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், வாகனத்தை அதிவேகமாகச் செலுத்துதல், சிவப்பு விளக்கின்போது பயணித்தல் போன்றவை முக்கியக் காரணமாக இருக்கின்றன. இதன் காரணமாகத்தான் அதிக விபத்துகளும் உயிரிழப்புகளும் நடக்கின்றன. இதன்படி கடந்த, 2021-ம் ஆண்டில் மட்டும் மொத்தமாக, 55,682 விபத்துகள் நடந்திருக்கின்றன.

ஹெல்மெட்
ஹெல்மெட்

இதில், 23,143 பேருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், 15,384 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதுபோல் நடப்பு 2022-ம் ஆண்டு, ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான, ஒன்பது மாதங்களில் மொத்தமாக, 48,438 விபத்துகள் நடந்திருக்கின்றன. இவற்றில், 13,146 பேருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் 13,345 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்த ஒன்பது மாதங்களில் ஏற்பட்ட உயிரிழப்பில் இருசக்கர வாகனத்தில் பயணித்த, 5,558 பேரும் அடங்குவர். மேலும் இவர்களில், ஜனவரி - 173 பேர்; பிப்ரவரி - 188 பேர்; மார்ச் - 190 பேர்; ஏப்ரல் - 182 பேர்; மே - 195 பேர்; ஜூன் - 198 பேர்; ஜூலை - 209 பேர்; ஆகஸ்ட் - 207 பேர்; செப்டம்பர் - 302 பேர் என மொத்தம், 1,844 பேர் 'ஹெல்மெட்' அணியாமல் பயணித்து இறந்திருக்கிறார்கள். இது தவிர, 80 விலங்குகளும் இறந்திருக்கின்றன.

சீட் பெல்ட்
சீட் பெல்ட்

இது குறித்து நம்மிடம் பேசிய போக்குவரத்துத்துறை ஆணையரக உயரதிகாரி ஒருவர், "தமிழகத்தில் விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். குறிப்பாக 'ஹெல்மெட்' அணியாமல் பயணிப்பதால் அதிகப்படியான உயிரிழப்பு ஏற்படுகிறது. கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் 'ஹெல்மெட்' அணியாத 1,844 பேர் இறந்திருக்கிறார்கள்.

இதனால்தான் சமீபத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத்தொகை உயர்த்தப்பட்டது. இருப்பினும், பலரும் வழக்கம்போல் தவறு செய்துவருகிறார்கள். தனது நலன் கருதியும், குடும்பத்தினர் நலன் கருதியும் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து மக்கள் பயணிக்க வேண்டும். இதுதவிர தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதிகமாக விபத்து நடக்கும் இடங்களைத் தேர்வு செய்துவைத்திருக்கிறோம்.

போக்குவரத்துத்துறை எழிலகம்
போக்குவரத்துத்துறை எழிலகம்

அங்கு விபத்தைக் குறைக்கும் வகையில் வேகத்தடை அமைப்பது, மேம்பாலம் கட்டுவது, தடுப்புகள் வைப்பது போன்ற பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. ஒருசில இடங்களில் இந்தப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. மேலும் பள்ளி - கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். இருப்பினும் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் விபத்து மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பு குறையும்" என்றார்.