Published:Updated:

`எவ்வளவோ சொன்னோம் டிரைவர் கேட்கல!' - உயிர் தப்பிய மணமகள் உறவினர்கள் குமுறல்

`ஒரு பெண் திருமணமாகி வீட்டுக்கு வரும்போது இதுபோன்ற சம்பவம் நடந்தால், மாப்பிள்ளை வீட்டார் எங்கள் பெண்ணை என்ன நினைப்பார்கள்'.

கவிழ்ந்து கிடக்கும் கல்யாண வேன்
கவிழ்ந்து கிடக்கும் கல்யாண வேன்

ஒரு பெண் திருமணமாகி வீட்டுக்கு வரும்போது இதுபோன்ற சம்பவம் நடந்தால், மாப்பிள்ளை வீட்டார் எங்கள் பெண்ணை என்ன நினைப்பார்கள். பெண் ராசி இல்லாதவர் என்று சொல்லமாட்டார்களா... இவர்களுடைய பணத்தாசையால் பெண்ணின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிவிட்டார்கள் என ஆதங்கப்படுகின்றனர், மணமக்களின் உறவினர்கள்.

விபத்தில் கவிழ்ந்து கிடக்கும் வேன்.
விபத்தில் கவிழ்ந்து கிடக்கும் வேன்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள காசாங்கோட்டையைச் சேர்ந்தவர், சதீஸ்குமார். இவருக்கும் பழமலைநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த அனிதா என்பவருக்கும் காசாங்கோட்டையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமக்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், மணமகள் ஊரான பழமலைநாதபுரம் கிராமத்துக்கு ஒரு வேனில் திரும்பியுள்ளனர்.

வேனில் 30 பேர் பயணம் செய்துள்ளனர். வேன் பழமலைநாதபுரம் கிராமத்தின் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், வேனில் பயணம் செய்த மணமக்கள் சதீஸ்குமார், அனிதா, பழமலைநாதபுரத்தைச் சேர்ந்த முத்தம்மாள், மஞ்சுளா, பாலமுருகன் உட்பட 28 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள்மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த
விபத்து நடந்த

விபத்துகுறித்து செந்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் சிலரிடம் பேசினோம். "ஓட்டுநரின் அலட்சியத்தால்தான் இந்த விபத்து நடந்தது. முகூர்த்த நாள் என்பதால், ஓட்டுநருக்கு வேறொரு சவாரி இருந்தது என்று எங்களுக்குத் தெரியாது.

நாங்கள் மண்டபத்திலிருந்து கிளம்பவே நேரம் ஆகிவிட்டது. இதனால், எங்களைத் திட்டிக்கொண்டே வண்டியெடுத்தார். வரும் வழியில் போன் பேசிக்கொண்டே வந்தார். அதற்கு எங்கள் உறவினர் ஒருவர், தம்பி வண்டியை நிப்பாட்டிட்டு பேசுப்பா, ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டா யார் பொறுப்பாவது என்று கேட்டுள்ளார். அதை அவர் காதுகொடுத்துக்கூட கேட்கவில்லை. இந்த நிலையில், வேறு ஒருவரிடம் செல்போன் பேசிக்கொண்டே வந்தபோது,

விபத்துகுள்ளானவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள்
விபத்துகுள்ளானவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள்

எதிரே வந்த லாரிக்கு வழிவிட முயன்றார், அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில், மணமக்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பெண் திருமணமாகி வீட்டுக்கு வரும்போது இதுபோன்ற சம்பவம் நடந்தால், மாப்பிள்ளை வீட்டார் இந்தப் பெண்ணை என்ன நினைப்பார்கள். பெண் ராசி இல்லாதவர் என்று தூத்த மாட்டார்களா... டிரைவரின் பணத்தாசையால் எங்களுடைய பெண்ணின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிவிட்டார்" என்று ஆதங்கத்தோடு முடித்தனர்.