Published:Updated:

டிரைவர் தூங்கிய மறுகணமே பறிபோன 29 உயிர்கள்!- டெல்லியைப் பதறவைத்த விபத்து

மலையரசு

டெல்லி அருகே, ஆக்ரா - யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் நடந்த விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

யமுனா எக்ஸ்பிரஸ் சாலை
யமுனா எக்ஸ்பிரஸ் சாலை

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து டெல்லிக்கு அரசுப்பேருந்து ஒன்று அதிகாலை பயணமாகியுள்ளது. 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இந்தப் பேருந்தில் பயணம்செய்துள்ளனர். அதிகாலை 4.15 மணியளவில், ஆக்ரா - யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் வந்தபோது, சாலைத் தடுப்பில் மோதிய பேருந்து திடீரென இரு பாலங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியில் கவிழ்ந்தது. ஆற்றில் தண்ணீர் இல்லாததால், பேருந்து விழுந்த சத்தம் பலமாகக் கேட்டுள்ளது. இந்த சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், பேருந்து விபத்துகுறித்து மீட்புப் படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

யமுனா எக்ஸ்பிரஸ் சாலை
யமுனா எக்ஸ்பிரஸ் சாலை

மீட்புப்படையினர், பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே 29 பேர் உயிரிழந்தது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், படுகாயங்களுடன் 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அதிகாலை நேரம் என்பதால், ஓட்டுநர் தூங்கியதால்தான் விபத்து ஏற்பட்டது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையே, உயிரிழந்த குடும்பங்களுக்கு உத்தரப்பிரதேச அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.