Published:Updated:

முகலிவாக்கம் கட்டட விபத்து: வெள்ளை அறிக்கை வெளியிட விஜயகாந்த் வலியுறுத்தல்!

விகடன் விமர்சனக்குழு
முகலிவாக்கம் கட்டட விபத்து: வெள்ளை அறிக்கை வெளியிட விஜயகாந்த் வலியுறுத்தல்!
முகலிவாக்கம் கட்டட விபத்து: வெள்ளை அறிக்கை வெளியிட விஜயகாந்த் வலியுறுத்தல்!
முகலிவாக்கம் கட்டட விபத்து: வெள்ளை அறிக்கை வெளியிட விஜயகாந்த் வலியுறுத்தல்!

சென்னை: முகவலிவாக்கம் கட்டட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ள தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை முகலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் பலியானது குறித்து விசாரணை கமிஷனை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நியமித்து இருக்கிறார். இந்த விசாரணை கமிஷன் இதில் உள்ள முறைகேடுகளை வெளியில் கொண்டு வருமா? என்கிற ஐயம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், இது போன்ற விசாரணை கமிஷன்கள் பலவற்றை இந்த அரசு அமைத்தும், இதுவரையிலும் எந்த தீர்வும் ஏற்பட்டதாக தெரியவில்லை. ஒரு சில விசாரணை கமிஷனின் அறிக்கையை அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கூட ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த விபத்தில் அதிகார மையத்தில் உள்ளவர்கள் முதற்கொண்டு அதிகாரிகளாக உள்ளவர்கள் வரை பலருடைய முறைகேடான அனுமதியால்தான் இந்த விபத்து நடந்திருக்கிறது என்று பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வந்து கொண்டுள்ளன.

விபத்து நடந்த பகுதியில் உள்ள பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் அந்த இடத்தில் 20 அடி ஆழத்திலேயே போரூர் ஏரியின் தண்ணீர் கசிவு உள்ளது என்றும், சுமார் 60 முதல் 80 அடி வரையில் ஆழம் சென்றால்தான் பாறையுடன் கூடிய கடின பூமி கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். அந்த ஊராட்சி மன்ற தலைவர் கூட இதே கருத்தைதான் பத்திரிகையில் சொல்லியுள்ளார். அவ்வளவு மோசமான நிலையில் உள்ள இடத்தில் 11 மாடி  கட்டடம் கட்டுவதற்கு அ.தி.மு.க ஆட்சியில்தான் (3.6.2013) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களும், அதிகாரிகளும் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு, விதிகளை தளர்த்தி அனுமதி கொடுத்துள்ளார்கள் என்ற சந்தேகம் பொது மக்களிடையே பலமாக எழுந்துள்ளது. சி.எம்.டி.ஏ.வின் விதிகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டு இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளதா? கட்டுமானத்தின்போது ஒவ்வொரு கட்டடத்திலும் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டதா? 11 மாடி கட்டடம் கட்ட ஏற்ற மண் வளம் உள்ளதா? என்பதற்கான விளக்கம் இதுவரையிலும் அரசு தரப்பில் இருந்து வரவில்லை. ஆனால், முதலமைச்சர் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், சி.எம்.டி.ஏ அனுமதி கொடுத்ததில் தவறில்லை என்று சொல்லியுள்ளார். எந்த விசாரணையின் அடிப்படையில் முதலமைச்சர் இந்த கருத்தை தெரிவித்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

அள்ளித் தெளித்த அவசர கோலத்தில் அவரே முடிவை அறிவித்துவிட்டு, தற்பொழுது விசாரணை கமிஷனை அமைத்துள்ளது கண் துடைப்பாகத்தான் இருக்கும் என்கின்ற ஐயம் மக்களிடையே எழுந்துள்ளது. முதலமைச்சரின் சொன்ன கருத்தை ஒட்டித்தான் விசாரணை கமிஷனின் அறிக்கையும் இருக்கும் என்பதை இப்பொழுதே யூகிக்க முடிகிறது.

மேலும், விசாரணை கமிஷன் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரகுபதி ஏற்கனவே பல விசாரணை கமிஷன்களிலும், நீதிமன்றங்களிலும் நீதிபதியாக இருந்து வருகிறார். பல நீதிப் பணிகளை செய்து வருபவரிடமே, இதையும் சேர்த்து வழங்குவதில் உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது.

தேசிய மனித உரிமை ஆணையம் தானாகவே முன்வந்து, இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு தமிழக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனவே, மேற்படி அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்றும், இந்த விபத்து குறித்த உண்மையான விவரங்கள் வெளி வருவதற்கு ஏதுவாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதாவை கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.