Published:Updated:

கும்மிடிப்பூண்டி: குளத்தின் ஆழத்தில் சிக்கிய சிறுமி; காப்பாற்ற முயன்ற 4 பேர் உயிரிழந்த பரிதாபம்!

குளம்
குளம்

கும்மிடிப்பூண்டி அருகே கோயில் குளத்தில் துணி துவைக்கும்போது ஆழத்தில் சிக்கிக்கொண்ட சிறுமியைக் காப்பாற்றும் முயற்சியில் ஒருவர் பின் ஒருவராக மொத்தம் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்து புதுகும்மிடிப்பூண்டி கரும்புக்குப்பம் சீதாம்பாள் தெருவைச் சேர்ந்த பெண்கள் சிலர், அதே பகுதியில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயில் குளத்தில் இன்று காலை துணி துவைக்கச் சென்றிருக்கின்றனர்.

அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகள் நர்மதா (12) குளக்கரையில் விளையாடிக்கொண்டிருந்தபோது ஆழத்தில் சிக்கிக்கொண்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களைக் கூச்சலிட்டு அழைத்திருக்கிறார். சிறுமி நர்மதாவின் அலறல் சத்தம் கேட்டு அவரைக் காப்பாற்ற அருகில் ஆண்கள் யாரும் இல்லாததால் உடனிருந்த பெண்கள் நீச்சல் தெரியாத நிலையில் குளத்தில் இறங்கியிருக்கின்றனர்.

முதலில், ராஜ் என்பவரின் மனைவி சுமதி (35), அவரின் மகள் அஸ்விதா (14) ஆகியோர் குளத்தில் இறங்கியிருக்கின்றனர். ஆனால், அவர்களும் ஆழத்தில் சேற்றில் சிக்கிக்கொண்டதால் அவர்களை மீட்க முனுசாமி என்பவரின் மனைவி ஜோதி (38), தேவேந்திரன் என்பவரின் மகள் ஜீவிதா (14) ஆகியோர் குளத்தில் இறங்கியிருக்கின்றனர். முதலாவதாகக் குளத்தில் சிக்கிய சிறுமி நர்மதா நீரில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து நீச்சல் தெரியாமல் குளத்தில் இறங்கிய இரண்டு சிறுமிகள், இரண்டு பெண்கள் உள்ளிட்டோரும் ஒருவர் பின் ஒருவராகத் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

குளத்தில் மூழ்கி பலி
குளத்தில் மூழ்கி பலி

துணி துவைத்துவிட்டு வருவதாகத் தங்கள் குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு, குளக்கரைக்கு வந்தவர்கள் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் கிராம மக்கள் சந்தேகத்தின் பேரில் குளக்கரைக்குச் சென்றிருக்கின்றனர். அப்போது அங்கு யாரும் இல்லாத நிலையில் துவைக்கக் கொண்டுவந்த துணிகள் மட்டும் சிதறிக் கிடந்ததை அடுத்து ஆண்கள் சிலர் குளத்தில் குதித்துத் தேடிய போது மூன்று சிறுமிகள் மற்றும் இரண்டு பெண்களின் உடல்களைக் கண்டறிந்தனர்.

கோயில் குளத்தில் ஐந்து பேர் பரிதாபமாக மூழ்கி உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து கிராம மக்கள் தீயணைப்புத்துறையினருக்கும், கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல்நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து மீட்கப்பட்ட உடல்களை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு கும்மிடிப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் ரித்து, வட்டாட்சியர் மகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் விரைந்து கிராம மக்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

ஒரே பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு