திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள குன்னுத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா மகள் முத்து(9), ராஜாவின் தம்பி சின்னராஜாவின் மகன் கிருத்திக்(8), இவர்களின் உறவினர் சந்திரன் மகள் தனலட்சுமி(10) ஆகியோர் அதேபகுதியில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

இவர்கள் சின்னராஜாவின் தோட்டத்தில் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் தோட்டத்தில் தனலட்சுமி, முத்து, கிருத்திக் உள்பட 5 குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். சிறிதுநேரத்தில் அப்பகுதியில் உள்ள சிவனாண்டி கண்மாய் கரையோரத்திற்கு விளையாட சென்றவர்கள் நீரில் இறங்கினர். தனலட்சுமி, முத்து, கிருத்திக் ஆகியோர் ஒவ்வொருவராக ஆழமான பகுதிக்கு சென்று கரைபகுதிக்கு வரமுடியாமல் மூழ்கியுள்ளனர்.
கரையில் இருந்த 2 சிறுவர்கள் அழுது கொண்டே ஊருக்குள் ஓடி பெரியவர்களிடம் என்ன நடந்தது என்பதைக் கூட சொல்ல முடியாத அளவுக்கு அழுது கொண்டே இருந்துள்ளனர். இதையடுத்து ஒருவழியாக கண்மாய் நீரில் 3 பேர் மூழ்கியது குறித்து கூற ஒரு மணிநேரத்துக்கு பிறகு ஊரில் இருந்தவர்கள் கண்மாயில் இறங்கி குழந்தைகளின் உடல்களை சடலமாக மீட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து தகவல் அறிந்து வந்த விருவீடு போலீஸார் குழந்தையின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரேநேரத்தில் 3 பள்ளி குழந்தைகள் கண்மாய் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது