Published:Updated:

குளத்தில் விழுந்த சிறுமி; காப்பாற்றச் சென்ற தாய், இளம்பெண்! தென்காசி அருகே 3 பேருக்கு நேர்ந்த சோகம்

குளத்தில் குளிக்கச் சென்றபோது ஆழமான பகுதியில் தவறி விழுந்த சிறுமியை மீட்கச் சென்ற தாய் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளம்
குளம்

தென்காசி மாவட்டம் பனையூர், மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் அழகு. ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். அவரின் மனைவி இந்திரா. அவர்களுக்கு 11 வயதில் சுமித்திரா என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த ஒரு மாதமாகப் பெய்த மழையால் பனையூர்குளம் நிரம்பியுள்ளது. அதனால் குளத்தின் கரையோரத்தில் பொதுமக்கள் குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள்
உயிரிழந்தவர்கள்

குளத்தில் குளிப்பதற்காக இந்திரா தன் மகள் சுமித்திராவை அழைத்துச் சென்றுள்ளார். அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் செல்வி என்ற 28 வயதுப் பெண்ணும் உடன் சென்றிருக்கிறார். குளத்தின் மூன்றாவது மடைப்பகுதியில் உள்ள பாதுகாப்பான இடத்தில் மூவரும் குளித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். அங்கு குளித்தபோது எதிர்பாராதவிதமாக சிறுமி சுமித்திரா குளத்துக்குள் தவறி விழுந்துள்ளார். அது ஆழம் மிகுந்த பகுதி என்பதால், அவர் உயிருக்குப் போராடிய நிலையில் தத்தளித்துள்ளார். அதனால், அதிர்ச்சியடைந்த தாய் இந்திரா, அவரைக் காப்பாற்றுவதற்காகக் குளத்துக்குள் குதித்துள்ளார். ஆனால், அவரும் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் போராடியுள்ளார்.

சிறுமி சுமித்ராவும் அவரின் தாய் இந்திராவும் குளத்தில் தத்தளித்தபடி உயிருக்குப் போராடியதைப் பார்த்த செல்வி கூச்சலிட்டு அக்கம்பக்கத்தில் வயல்களில் வேலை செய்தவர்களை உதவிக்கு அழைத்திருக்கிறார். அவர்களும் ஓடோடி வந்துள்ளனர். இருவரும் உயிருக்குப் போராடுவதைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்ட செல்வியும் குளத்துக்குள் குதித்து அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால், அவருக்கும் சரிவர நீச்சல் தெரியாததால் மூன்று பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

குளம்
குளம்

உதவிக்காக ஓடிவந்தவர்கள் பார்த்தபோது மூவருமே தண்ணீரில் மூழ்கிவிட்டனர். அதனால் குளத்துக்குள் குதித்தவர்களால் மூவரையும் சடலங்களாகவே மீட்க முடிந்தது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் கரிவலம் வந்தநல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியதுடன் மூவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த தாய், மகள் உட்பட மூன்று பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பனையூர் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.