Published:Updated:

குருபூஜைக்காக விரைந்த வாகனங்கள்! - மானாமதுரையில் அடுத்தடுத்த விபத்துகளால் பறிபோன உயிர்கள்

"தேவர் குருபூஜை நாளில் வாகனங்களை வேகமாக ஓட்டி வந்ததால் சில இடங்களில் விபத்துகள் ஏற்பட்டன. அதுபோக சில இடங்களில் கவனக்குறைவு காரணமாகவும் விபத்துகள் ஏற்பட்டுள்ளன.''

விபத்து
விபத்து

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112-வது ஜயந்தி விழாவை முன்னிட்டு, தேவர் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மரியாதை செய்தபின் பசும்பொன்னில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

முதல்வர்  மரியாதை
முதல்வர் மரியாதை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், வைகோ, டி.டி.வி.தினகரன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்துகொண்டனர். மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் தேவர் ஜயந்திக்குச் செல்லும் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அரசியல் கட்சித் தலைவர்களின் வருகையால் பரபரப்பில்லாமல் போனாலும் பசும்பொன்னை நோக்கி இளைஞர்கள் வாகனங்களில் விரைவாகச் சென்றதில் பல்வேறு இடங்களில் விபத்து ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம், வண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பசும்பொன் தேவர் நினைவிடத்துக்குச் செல்வதற்காக அரசுப் பேருந்தை வாடகைக்கு எடுத்து கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்தனர். இதில் பல இளைஞர்கள் பஸ்ஸின் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்துவந்தனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மானாமதுரை தல்லாகுளம் முனியாண்டி கோயில் பாலம் ஏற்றத்தில் உள்ள வளைவில் திரும்பியபோது மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியிலிருந்து பசும்பொன் சென்ற கார், பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற வண்டல் கிராமத்தைச் சேர்ந்த மலைராஜ் மகன் பிரபாகரன் (28) கீழே விழுந்து காயமடைந்தார். சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இவர் உயிரிழந்தார்.

மானாமதுரை புதிய பேருந்துநிலையம் முன்பு சாலையைக் கடக்க முயன்ற 70 வயது முதியவர் மீது பசும்பொன்னுக்குச் சென்ற கார் மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதே போல் மானாமதுரையில் மூர்த்தி (48) என்பவரும் அவரது உறவினர் முருகன் (46) இருவரும் தங்களது வாகனத்தில் அண்ணாசிலை பைபாஸ் ரோடு அருகே சாலையை டூவீலரில் கடக்கும்போது ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

தேவர் ஜயந்தி அன்று இப்படி பல்வேறு விபத்துகள் மானாமதுரை பகுதியில் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தேவர் ஜயந்தி
தேவர் ஜயந்தி

இது தொடர்பாக மானாமதுரை டி.எஸ்.பி கார்த்திகேயனிடம் பேசியபோது, "தேவர் குருபூஜை நாளில் வாகனங்களை வேகமாக ஓட்டி வந்ததால் சில இடங்களில் விபத்துகள் ஏற்பட்டன. அதுபோக சில இடங்களில் கவனக்குறைவு காரணமாகவும் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறோம். விபத்துகளைக் குறைக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்'' என்றார் உறுதியாக.