Published:Updated:

ஏரியில் இறங்கிய சிறுவன்; காப்பாற்றச் சென்ற 2 சிறுமிகள்! - அரக்கோணத்தில் நேர்ந்த துயரம்

உயிரிழந்த மாணவர்கள்
உயிரிழந்த மாணவர்கள்

அரக்கோணம் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுமிகளும் ஒரு சிறுவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த பாணாவரம் மலைமேடு பகுதியைச் சேர்ந்தவர் தேசன். கூலித்தொழிலாளி. இவரின் மகள் அஸ்வினி (15). அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் உலகநாதன் மகள் ஜெயஸ்ரீ (10), சங்கரின் மகன் தமிழரசன் (7).

துயரம்
துயரம்

இவர்கள் 3 பேரும் அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்துவந்தனர். ஞாயிற்றுக்கிழமையான இன்று, விடுமுறை என்பதால் அஸ்வினியும் ஜெயஸ்ரீயும் துணி துவைப்பதற்காக அதே பகுதியில் உள்ள வேடந்தாங்கல் ஏரிக்குச் சென்றனர். அவர்களுடன் சிறுவன் தமிழரசனும் சென்றான்.

மாணவிகள் துணி துவைத்துக்கொண்டிருந்தபோது, தமிழரசன் குளிக்க ஆசைப்பட்டு தண்ணீரில் இறங்கினான். நீச்சல் தெரியாததால், தண்ணீரில் மூழ்கித் தத்தளித்தான். தமிழரசனைக் காப்பாற்ற இரண்டு சிறுமிகளும் முயற்சி செய்தனர். அவர்களும் தண்ணீரில் விழுந்து மூழ்கினர்.

மருத்துவர்கள்
மருத்துவர்கள்

அந்த வழியாகச் சென்ற வெங்கடேசன் என்பவர் ஏரியில் மூழ்கிய 3 பேரையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே கிராமத்துக்குள் சென்று தகவல் கொடுத்தார். ஊர் மக்கள் கதறி அழுதபடி ஏரிக்கு ஓடிவந்து தண்ணீரில் குதித்துத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரத்துக்குப் பிறகு 2 சிறுமிகளும் அந்தச் சிறுவனும் சடலமாக மீட்கப்பட்டது, அனைவரையும் பதறவைத்தது. ஆனாலும், 108 ஆம்புலன்ஸை வரவழைத்து சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு உடல்களை தூக்கிச் சென்றனர்.

உயிரிழந்த மாணவர்கள்
உயிரிழந்த மாணவர்கள்

மருத்துவர்கள், பரிசோதனை செய்துபார்த்ததில் அவர்கள் இறந்து நீண்ட நேரமாவதாகக் கூறினர். இதனால், கிராமமே சோகத்தில் மூழ்கியிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, பாணாவரம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு