Published:Updated:

மலைக் கிராமத்தில் `திடீர்' மின் தடை! - பேச்சிப் பாறை ஜீரோ பாயின்ட்டில் இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்

மலைக் கிராமங்களில் மரக்கிளைகள் விழுவது உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி மின்சாரம் தடைபடுவது வழக்கம்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞர்கள்
மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞர்கள்

கன்னியாகுமரி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதியான பேச்சிப்பாறை அருகே உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் மலைக்கிராமம் குற்றியார். இந்தக் கிராமத்தில் நேற்று இரவு மின்சாரம் தடைபட்டுள்ளது. இதையடுத்து, அந்தக் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் சிலர், அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கும் பேச்சிபாறை ஜீரோபாயின்ட் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

உயிரிழந்த இளைஞர்
உயிரிழந்த இளைஞர்

அங்குள்ள மின்மாற்றியில் காய்ந்த கம்பால் தட்டி தங்கள் கிராமத்துக்கு மின்சாரம் கொண்டு வர முயற்சி செய்துள்ளனர். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் குற்றியார் பகுதியைச் சேர்ந்த சஜின் சலோ (22), சுபாஷ் (20), மன்மதன் (25) ஆகியோர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த பேச்சிப்பாறை போலீஸார் அங்கு சென்று இளைஞர்களின் உடலை மீட்டனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக மூன்று உடல்களையும் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். ஒரே கிராமத்தில் மூன்று இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பழங்குடியின கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உயிரிழந்த இளைஞர்
உயிரிழந்த இளைஞர்

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், ``மலைக் கிராமங்களில் மரக்கிளைகள் விழுவது உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி மின்சாரம் தடைபடுவது வழக்கம். ஒருமுறை மின்சாரம் தடைபட்டால் மீண்டும் மின்சாரம் வருவதற்கு சில நாள்கள் ஆகிவிடும்.

மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக வந்து சரி செய்ய மாட்டார்கள். எனவே, சிறிய பழுதுகள் காரணமாக மின்சாரம் தடைபட்டால், கிராமத்து இளைஞர்களே அதனைச் சரி செய்வது வாடிக்கை.

உயிரிழந்த இளைஞர்
உயிரிழந்த இளைஞர்

நேற்றும் அதுபோல மின்சாரம் தடைபட்டதால் கையில் கிளவுஸ் அணிந்துதான் மின்மாற்றியில் பழுதை நீக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், சப் ஸ்டேஷனில் இருந்து வரும் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததால் அந்த இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்" என்கின்றனர் வேதனையோடு.