Published:Updated:

`பல வருடங்களாகக் கேட்டும் போடவில்லை!' - வேகத்தடையால் பறிபோன சிறுவன் உயிர்

விபத்து
விபத்து

கோர விபத்தைப் பார்த்த துட்டம்பட்டி பொதுமக்கள் கண்ணீர் விட்டு அழுததோடு இந்தப் பள்ளி அருகே வேகத்தடை வேண்டுமென்று பல வருடமாகக் கோரிக்கை வைத்தும் அமைத்துக் கொடுக்கவில்லை.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் துட்டம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே தன் தந்தையோடு டூ வீலரில் பள்ளிக்கு வந்த 3ம் வகுப்பு மாணவன் மீது கன்டெய்னர் லாரி ஏறியதால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தான். மாணவனைக் கூட்டி வந்த தந்தைக்கும் தம்பிக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

போராட்டம்
போராட்டம்
க.தனசேகரன்

இந்த கோர விபத்தைப் பார்த்த துட்டம்பட்டி பொதுமக்கள் கண்ணீர் விட்டு அழுததோடு இந்தப் பள்ளி அருகே வேகத்தடை வேண்டுமென்று பல வருடமாகக் கோரிக்கை வைத்தும் அமைத்துக் கொடுக்கவில்லை.

வேகத்தடை இருந்திருந்தால் இந்தக் கோர விபத்து நடந்திருக்காது என்று ஆதங்கப்பட்டு அனைவரும் ஒன்று சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதோடு அந்த வழியாக வந்த அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து சாலையில் டயரை போட்டுத் தீ வைத்தார்கள். அதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேசி சமரசத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி கோனேரிவளவு பகுதியைச் சேர்ந்த தாசப்பன், ``எங்க ஊரைச் சேர்ந்தவர்கள் செந்தில் அமுதா தம்பதியர். இவர்களுக்கு 3ம் வகுப்பு படிக்கும் கதிர்வேல் மற்றும் 2ம் வகுப்பு படிக்கும் பூபதி என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இன்று காலை செந்தில் தன் இரண்டு மகன்களையும் டூவீலரில் துட்டம்பட்டி அரசுப் பள்ளிக்குக் கூட்டிச் சென்றார். அப்போது துட்டம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே தாரமங்கலத்திலிருந்து சங்ககிரி நோக்கி வந்த கன்டெய்னர் லாரி டூவீலரில் மோதியது.

அரசுப் பேருந்து
அரசுப் பேருந்து
க.தனசேகரன்

இதில் நிலை தடுமாறி செந்தில், பூபதி, கதிர்வேல் கீழே விழுந்தார்கள். இதில் கதிர்வேல் மீது லாரி ஏறியதால் உடல் நசுங்கி ரத்தம் வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பூபதி காதில் ரத்தம் வருகிறது. செந்தில் கடுமையான நெஞ்சு வலிப்பதாகத் துடிக்கிறார். அதனால் உடனே சேலத்தில் சிகிச்சைக்காகக் கொண்டு வந்து விட்டோம்.

துட்டம்பட்டி பொதுமக்கள் பள்ளிக்கூடம் அருகே வேகத்தடை வேண்டுமென்று பல வருடமாகக் கேட்டும் போடாததாலும் குழந்தையின் கோர விபத்தைப் பார்த்தும் கோபத்தில் அந்த வழியாகச் சென்ற பேருந்துகளை நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு உதவி செய்வதோடு உடனே அந்த இடத்தில் வேகத்தடை அமைத்துக் கொடுக்க வேண்டும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு