Published:Updated:

ஒரு கிலோ மீட்டர் தொலைவு; தண்டவாளத்தில் அடுத்தடுத்து 4 சடலங்கள்! - ஆந்திர போலீஸார் அதிர்ச்சி

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அடுத்தடுத்து 4 சடலங்கள் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Representation Image
Representation Image

ரயில் தண்டவாளத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அடுத்தடுத்து 4 சடலங்கள் கிடந்துள்ளன. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ரயில்வே போலீஸாருக்குத் தெரிவித்தனர். இதையடுத்து ரயில்வே போலீஸார் அனந்தபூர் மாவட்டம் ஹிந்துபுரம் ரயில் நிலையம் அருகில் உள்ள பகுதியில் பார்வையிட்டனர். அப்போது கோட்னூர் ரயில்வே கேட் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரயில் நிலையம்
ரயில் நிலையம்

அருகில் உள்ள மற்றொரு ரயில்வே கேட் பகுதியில் மேலும் மூன்று சடலங்கள் இருப்பதாகத் தகவல் வந்தது. தண்டவாளத்தை சோதனை செய்தபோது ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் சடலங்கள் இருந்தன. முதலில் விபத்தாக இருக்கும் எனக் கருதிய போலீஸாருக்கு அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் அதிர்ச்சியைக் கொடுத்தன. ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த 4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தண்டவாளத்தில் கைப்பற்றப்பட்ட உடல்கள் அனைத்தும் 55 - 65 வயது மதிக்கத்தக்க நபர்கள் என போலீஸார் கூறுகின்றனர்.

இந்தியாவில் இது முதல்முறை! - தனியார் நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விடப்பட்ட ரயில் நிலையம்

ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட நான்கு சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக ஹிந்துபூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தண்டவாளம்
தண்டவாளம்

இதுகுறித்து பேசிய காவல்துறையினர், ``தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நபர்களின் அடையாளம் தெரியவில்லை. ரயில் வரும்போது தண்டவாளத்தைக் கடக்க முற்படும் போது விபத்து ஏற்பட்டதா? இல்லை தற்கொலையா எனத் தெரியவில்லை. விபத்தா? தற்கொலையா? கொலையா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இவர்களின் அடையாளம் கண்டுபிடித்தால்தான் மரணத்துக்கான காரணம் தெரியவரும். இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களா, உறவினர்களா என எந்த விவரமும் இதுவரை கிடைக்கவில்லை” எனத் தெரிவித்தனர்.