Published:Updated:

ஒரே இடத்தில் 4 சகோதரர்கள் தொடர்ந்து பலி... 15 மாதங்களுக்குள் தொடர்ந்து நடந்த விபத்தால் பரிதாபம்

குட்டனின் குடும்பத்தினருக்கு விபத்துகளால் ஏற்பட்ட துயரம் தீர்ந்தபாடில்லை.

விபத்தில் 4 சகோதரர்கள் பலி
விபத்தில் 4 சகோதரர்கள் பலி

கேரளாவில் 15 மாதங்களுக்குள் ஒரே இடத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 4 சகோதரர்கள் தொடர்ச்சியாகப் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சூர் மாவட்டத்தில், தாளூர் - மண்ணுத்தி தேசிய நெடுஞ்சாலையில் மரத்தக்காரா என்ற பகுதியில் புல்லம்பள்ளம் ஜங்ஷன் உள்ளது. விபத்துகள் அடிக்கடி நடக்கும் பகுதி. ஏராளமானோர், இங்கே நடந்த விபத்துகளில் பலியாகியிருக்கின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை
தேசிய நெடுஞ்சாலை

இதே பகுதியைச் சேர்ந்தவர் குட்டன். இவருக்கு, 4 மகன்கள். கடந்த 15 மாதங்களுக்கு முன், சகோதரர்கள் 4 பேரும் நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்று விட்டு, இரவில் நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். புல்லம்பள்ளம் ஜங்ஷனைக் கடந்த போது, லாரி மோதியதில் குட்டனின் மூத்த மகன் சுதாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கடந்த ஜூலை மாதத்தில் இதே பகுதியில் ஏற்பட்ட விபத்தில், குட்டனின் மற்றொரு மகன் சீனிவாசன் மரணமடைந்தார். சில நாள்கள் கழித்து, குட்டனின் இன்னொரு மகனான ஆனந்தனும் புல்லம்பள்ளம் ஜங்ஷனிலிருந்து 300 அடி தொலைவில் பைக் மோதி இறந்து போனார். ஒரே வீட்டில் 3 பேர் பலியான பிறகும், குட்டனின் குடும்பத்தினருக்கு விபத்துகளால் ஏற்பட்ட துயரம் தீரவில்லை.

ஆபத்தான வகையில் சாலையைக் கடக்கும் மக்கள்
ஆபத்தான வகையில் சாலையைக் கடக்கும் மக்கள்

கடந்த சனிக்கிழமை இரவு குட்டனின் மகன் உன்னி கிருஷ்ணன் புல்லம்பள்ளம் ஜங்ஷனில் நடந்துசென்றுகொண்டிருந்தார். அப்போது, பைக் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 4 பேரும் இரவு நேரத்தில் நடந்த விபத்தில்தான் உயிரைப் பறிகொடுத்துள்ளனர். 15 மாதங்களுக்குள் ஒரே பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 4 சகோதரர்களும் உயிரிழந்திருப்பது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.