Published:Updated:

`நள்ளிரவில் விருந்து; அதிவேகப் பயணம்!’ - மேல்விஷாரத்தை உலுக்கிய இளைஞர்களின் கோர மரணம்

விபத்தில் உருக்குலைந்த லோடு ஆட்டோ
விபத்தில் உருக்குலைந்த லோடு ஆட்டோ

மேல்விஷாரத்தில், நள்ளிரவு ஏற்பட்ட விபத்தில், ஒரே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் ஹாஜிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிலால் மகன் துபைல். இவர் நண்பரின் சகோதரிக்கு இன்று திருமணம் நடைபெற உள்ளது. அதையொட்டி, நேற்றிரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஹாஜிப்பேட்டையைச் சேர்ந்த ஹாரிப் என்ற இளைஞருக்குச் சொந்தமான லோடு ஆட்டோவில் துபைல் மற்றும் அவரின் நண்பர்கள் 10 பேர் புறப்பட்டுச் சென்றனர்.

விபத்து
விபத்து

அந்த வாகனத்தை உரிமையாளர் ஹாரிப்பே ஓட்டிச் சென்றார். வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு ஆற்காடு-கண்ணமங்கலம் சாலையில் உள்ள விளாப்பாக்கம் பஞ்சபாண்டவர் மலைப் பகுதிக்குச் சென்றனர். அங்கு தனி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதை முடித்துவிட்டு நள்ளிரவு 1.45 மணிக்கு ஊர் திரும்பினர். வாகனத்தை ஓட்டி வந்த ஹாரிப் உட்பட அனைவருமே `தன்னிலையில் இல்லை’ என்று கூறப்படுகிறது.

அதிவேகத்தில் வந்த காரணத்தினால், கத்திவாடி கூட்ரோடு பகுதியில் வளைந்தபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதியது. வாகனத்தின் முகப்புப் பகுதி முற்றிலும் நொறுங்கி உருக்குலைந்தது. இந்தக் கோர விபத்தில், துபைல் (19), சையத் (20), கரிமுல்லா (19), அலீம் (20) ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

தடுப்புச் சுவரில் மோதி நிற்கும் வாகனம்
தடுப்புச் சுவரில் மோதி நிற்கும் வாகனம்

ஓட்டுநர் ஹாரிப் (20), முபாரக் (20), இதயதுல்லா (20), மற்றொரு ஹாரிப் (18), சையத் (21), நிகால் (18), ஜபருல்லா (19) ஆகிய 7 பேருக்கும் தலை, கை, கால், உடம்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதி மக்கள் வீடுகளிலிருந்து சம்பவப் பகுதிக்கு ஓடி வந்தனர்.

ஆற்காடு நகர போலீஸாரும் அங்கு விரைந்து வந்து படுகாயமடைந்த 7 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இளைஞர்களின் சடலங்கள்
இளைஞர்களின் சடலங்கள்

உயிரிழந்த 4 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம், மேல்விஷாரம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு