Published:Updated:

முதுகுளத்தூர்: குறையாத வேகம்; நேருக்கு நேர் மோதிக்கொண்ட டூ வீலர்கள்! - 4 பேர் பலியான சோகம்

விபத்தில் பலியானவர்கள்
விபத்தில் பலியானவர்கள்

முதுகுளத்தூர் அருகே இரண்டு டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதுகுளத்தூர் அருகே திருமண விழாவுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியபோது இரு டூவீலர்கள் மோதிக்கொண்டதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாலையிலுள்ள வளைவால் இந்த விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

டூ வீலர் விபத்து
டூ வீலர் விபத்து

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகேயுள்ள பேரையூர் அய்யனார்புரத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரும் முனீஸ்வரன் என்பவரும் நெருஞ்சிப்பட்டி கிராமத்தில் நடந்த உறவினர் ஒருவரின் திருமணத்துக்கு டூ வீலரில் சென்றிருக்கிறார்கள். திருமண நிகழ்ச்சி முடிந்த நிலையில், நேற்று இரவு இருவரும் அய்யனார்புரத்துக்கு வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தனர். இதேபோல் மேலக்கொண்டுலாவி கிராமத்தை சேர்ந்த முனியசாமி, பழனி ஆகிய இருவரும் பேரையூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு ச்சென்றுவிட்டு டூ வீலரில் சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.

விபத்தில் சிக்கிய டூ வீலர்கள்
விபத்தில் சிக்கிய டூ வீலர்கள்

பேரையூர்-இலந்தைக்குளம் விலக்கு ரோட்டில் அதிவேகமாக வந்துகொண்டிருந்த இந்த இரு டூ வீலர்களும், நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் டூ வீலரில் வந்த நான்கு பேரும் பலத்த காயமடைந்த நிலையில், சாலையில் மயங்கி விழுந்திருக்கிறார்கள். அவ்வழியே வந்தவர்கள் இது குறித்து பேரையூர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

சென்னை:`திருட்டு கார் விபத்து; காட்டிக்கொடுத்த சர்வீஸ் சென்டர்' - போலீஸில் சிக்கிய நபர்

இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் மயங்கிக் கிடந்த நான்கு பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் முதுகுளத்தூர் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு காயமடைந்தவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், காயமடைந்த நான்கு பேரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை கூடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. விபத்தில் நால்வர் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த உறவினர்கள், முதுகுளத்தூர் மருத்துவமனை முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

விபத்தில் பலியானவர்கள்
விபத்தில் பலியானவர்கள்
விகடன்

விபத்து குறித்து பேரையூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) சோமசுந்தரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். ``விபத்து நடந்த இலந்தைகுளம் சாலையும், பேரையூர் சாலையும் சந்திக்கும் இடத்தில் வளைவான பகுதி இருக்கிறது. மூன்று சாலைகள் சந்திக்கும் இந்தப் பகுதியில் வேகத் தடைகளும் இல்லை. அதனால், அடிக்கடி விபத்து ஏற்படுவது வழக்கமாக இருக்கிறது. நேற்று இரவு நடந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, விபத்தைத் தடுக்கும் வகையில் இப்பகுதியில் வேகத் தடைகளை ஏற்படுத்த வேண்டும்’’ எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

அடுத்த கட்டுரைக்கு