Published:Updated:

ரஷ்யா: `மீட்புப் படை வருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது!’ - கடலூரில் குடும்பத்தினர் கண்ணீர்

ரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்
ரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்

ரஷ்ய நாட்டில் ஆற்றில் சிக்கித் தவித்த நண்பனை காப்பாற்றும் முயற்சியில் 4 தமிழக மருத்துவ மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ரஷ்ய நாட்டில் வோல்கோகிரெட் மாநிலத்தில் இயங்கி வருகிறது வோல்கோகிரெட் (Volgograd State Medical University) மருத்துவ பல்கலைக்கழகம். இங்கு கடலூர் மாவட்டம், திட்டக்குடியை சேர்த்த ராமு என்பாரின் மகன் விக்னேஷ் (வயது 23) எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் திட்டக்குடியைச் சேர்ந்த விக்னேஷ், மனோஜ் ஆனந்த், சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தைச் சேர்ந்த முகம்மது ஆஷிக் நால்வரும் பல்கலைக்கழகத்துக்கு அருகே இருக்கும் ஓல்கா ஆற்றிற்கு குளிப்பதற்காகச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ரஷ்யா வோல்கா ஏரி
ரஷ்யா வோல்கா ஏரி

அப்போது அவர்களில் ஒருவர் ஆற்றில் இறங்கிய போது அவர் நீரில் உயிருக்குப் போராடியிருக்கிறார். உடனே அவரை காப்பாற்றுவதற்காக விக்னேஷ் உள்ளிட்ட மூன்று பேரும் ஆற்றில் இறங்கியிருக்கின்றனர். ஆனால் நண்பனைக் காப்பாற்றும் முயற்சியில் மூன்று பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றனர்.

திட்டக்குடி மாணவரான விக்னேஷின் அண்ணன் நிஷாந்த்தை தொடர்புகொண்டபோது, "வோல்கோகிரெட் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்து வந்தார். அவர்களின் பல்கலைக்கழகத்திற்கு அருகே ஓல்கா என்ற ஆறு இருக்கிறது. அந்த ஆற்றிற்கு விக்னேஷ் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கிறார். அப்போது இவர்களுடன் இருந்த மாணவர் ஒருவர் ஆற்றில் இறங்கிய போது அவர் நீரில் சிக்கிக்கொண்டார்.

உயிருக்குப் போராடிய 5 வயது சிறுமி... உதவிய இன்ஸ்பெக்டர், காவலர்! | Humanity

அதையடுத்து அவரை காப்பாற்ற விக்னேஷ் உட்பட மூன்று பேர் சென்றுள்ளனர். ஆனால் ஆற்றில் மூழ்கிய நபரை காப்பாற்றும் முயற்சியில் அனைவரும் நீரில் சிக்கிக்கொண்டனர். ஆற்றின் கரையோரம் இருந்த மற்ற மாணவர்கள் இவர்களை காப்பாற்ற சென்றால் ஆற்றில் சிக்கி விடுவோம் என்ற பயத்தில் உள்ளே இறங்கவில்லை. அதனால் போலீஸுக்கு மட்டும் தகவல் தெரிவித்துவிட்டார்கள். அதன்பிறகு மீட்புப் படையினர் வந்துதான் நால்வரையும் மீட்டனர். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. என் தம்பியின் உடலை இந்தியா கொண்டு வருவதற்காக கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க இருக்கிறேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு