தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள துறையூர் ’செஞ்சுரி ஃபயர் ஒர்க்ஸ்’ என்ற தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையை கோவில்பட்டி, ராஜீவ்நகரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 45 அறைகள் உள்ளன. நாக்பூர் உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது. இங்கு, 130 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இன்று வழக்கம்போல, தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், பேன்சி ரக பட்டாசுகளுக்கு மருந்து கலவை நிரப்பும் இடத்தில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. அதில், அந்த கட்டடம் முழுவதுமாக வெடித்துச் சிதறி தரை மட்டமானது. இந்த வெடி விபத்தில் ஈராட்சியைச் சேர்ந்த ராமர், தொட்டம்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ், குமாரபுரத்தைச் சேர்ந்த தங்கவேல், நாலாட்டின்புதூரைச் சேர்ந்த கண்ணன் ஆகிய 4 பேரும் சிக்கி உயிரிழந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தது மட்டுமின்றி, ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் அந்த கட்டட இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருந்துக் கலவையை இரும்பு வாளியில் எடுத்துச் சென்றபோது கீழே கொட்டியதில், கலக்கப்படாத மணிகள் மருந்தில் பட்டு விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், தாசில்தார் அமுதா, மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் குமார், கோவில்பட்டி டி.எஸ்.பி உதயசூரியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கொப்பம்பட்டி போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.