Published:Updated:

`தேசிய நெடுஞ்சாலை 3 சதவிகிதம்; விபத்துகளோ 40 சதவிகிதம்!'- விளக்கும் மாநிலப் போக்குவரத்து ஆணையர்

போக்குவரத்து ஆணையர் ஜவஹர்
போக்குவரத்து ஆணையர் ஜவஹர்

தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் விபத்தில்லா மாநிலமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படும். 

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களின் சாலைப் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழக அரசின் முதன்மைச் செயலாளரும் தமிழகப் போக்குவரத்துத் துறை ஆணையருமான தென்காசி ஜவஹர் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு

போக்குவரத்துத் துறை ஐ.ஜி-யான பிரமோத்குமார், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ், தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண்சுந்தர் தயாளன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி, குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம்.வடநரே மற்றும் நான்கு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சாலைப் பாதுகாப்பு, ஓட்டுநர் உரிமம் வழங்குவது, வாகனப் பதிவு, போக்குவரத்துத் துறை தொடர்பான வழக்குகள், விபத்தைத் தடுப்பது உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து ஆலோனை நடத்தப்பட்டன. விபத்து இல்லாத பயணத்தை உறுதியாக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. 

போக்குவரத்து ஆணையர் தென்காசி ஜவஹர்
போக்குவரத்து ஆணையர் தென்காசி ஜவஹர்

அதைத் தொடர்ந்து தமிழகப் போக்குவரத்துத் துறை ஆணையரான தென்காசி ஜவஹர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ``நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் மொத்தம் 17 ஆயிரம் கிலோமீட்டர் நீளச் சாலைகள் உள்ளன. நான்கு மாவட்டங்களிலும் மொத்தமாக 30,44,000 வாகனங்கள் இயங்கிவருகின்றன.

2016-ம் ஆண்டு தமிழகத்தில் சாலை விபத்துகளில் 17,000 பேர் உயிரிழந்தனர். இந்திய அளவில் தமிழகத்திலேயே அதிக விபத்து நடந்திருந்தது. அதை அடுத்த மூன்று ஆண்டுகளில் படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் 2019-ம் ஆண்டில் 10,000 உயிரிழப்புகளாகக் குறைக்கப்பட்டது. 

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு

வரும் 2030-ம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளே நடக்காத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விபத்துகளைக் குறைப்பதற்காகப் போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படும். தமிழகத்தில் மொத்தமாக உள்ள 2,90,00,000 வாகனங்களில் 2,40,00,000 இரு சக்கர வாகனங்கள் இயங்குகின்றன.

இரு சக்கர வாகனங்களின் காரணமாகவே அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. அதனால் ஓட்டுநர் உரிமம் வழங்குவது கடுமையாக்கப்படும். போதையில் வாகனம் ஓட்டினால் சட்டரீதியான நடவடிக்கை உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள சாலைகளில் தேசிய நெடுஞ்சாலையைப் பொறுத்தவரை 3 சதவிகிதம் மட்டுமே உள்ளன. ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளில்தான் 40 சதவிகிதம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.  

தென்காசி ஜவஹர்
தென்காசி ஜவஹர்

அதனால் சாலைகளை மேம்படுத்துவது குறித்து நெடுஞ்சாலைத்துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படுவதுடன், டோல்கேட் பிரச்னை உள்ளிட்டவைக்காக நோட்டீஸ் அனுப்பவும் திட்டமிட்டுள்ளோம். நெல்லை – தென்காசி மாவட்டங்களில் விபத்து ஏற்படும் இடங்களாக 25 இடங்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் 13 இடங்களும், குமரியில் 3 இடங்களும் விபத்து ஏற்படும் இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. அதனால் அந்த இடங்களில் விபத்துகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு