கர்நாடக மாநிலம், மங்களூரு சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள மீன் பதப்படுத்துதல் பிரிவான ஸ்ரீ உல்கா எல்.எல்.பி-யில், கழிவுநீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்தவர்களில் 5 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை 7 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் கமிஷனர் குமார், ``கழிவுநீர் சேகரிப்புத் தொட்டியில் மயங்கி விழுந்த தொழிலாளி ஒருவரைக் காப்பற்ற, கழிவுநீர் சேகரிப்புத் தொட்டிக்குள் குதித்த ஏழு பேர் மூச்சுத்திணறி மயங்கிவிட்டனர். பின்னர் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் மூன்று பேர் நேற்றிரவே உயிரிழந்துவிட்டனர். இன்று காலை இரண்டு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்தனர்.

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்திருக்கிறது. இவர்களில் மூன்று பேர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டனர்" என்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப் பதப்படுத்துதல் பிரிவின் மேலாளர், மேற்பார்வையாளர் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304 (கொலைக்குச் சமமான குற்றமற்ற கொலை)-ன் கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
