Published:Updated:

50 அடி ஆழம்; ஆழ்துளையில் தலைகீழாக விழுந்த 5 வயது சிறுமி!- கண்கலங்க வைத்த 14 மணிநேர மீட்புப் பணி

மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தையை உயிருடன் மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

ஹரியானா மீட்புப் பணி
ஹரியானா மீட்புப் பணி

திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து, குழந்தை சுஜித் உயிரிழந்ததை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க மாட்டோம். 4 நாள்கள் நடந்த மீட்புப் போராட்டம், உலகம் முழுவதும் நடந்த பிரார்த்தனை, தாயின் பாசப் போராட்டம் எனக் கலங்க வைத்த இந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரம் முடிவதற்குள் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சுஜித் உடல்
சுஜித் உடல்

ஹரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் உள்ள ஹர்சிங்புரா என்னும் கிராமத்தில், நேற்று வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது 5 வயதுச் சிறுமி ஒருவர் தவறி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளார். விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை எனப் பெற்றோர் தேடியபோது குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தகவல் தெரியவந்தது.

உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தையை உயிருடன் மீட்கும் முயற்சியில் இறங்கினர். குழந்தை விழுந்த ஆழ்துளைக் கிணறு குழந்தையின் குடும்பத்துக்குச் சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளது. உடனடியாக கிணற்றுக்குள் கேமரா அனுப்பப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் குழந்தையின் கால்கள் தெரிந்துள்ளன. இதனால் குழந்தை தலைகீழாக விழுந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.

ஹரியானா மீட்புப் பணி
ஹரியானா மீட்புப் பணி

மேலும், குழந்தை 50 அடி ஆழத்தில் சிக்கியிருப்பது தெரிய வந்தது. உடனடியாக குழந்தைக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டது. கூடுதலாக குழந்தைக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பெற்றோர் பேசிய ஆடியோ ஒன்றும் கிணற்றுக்குள் குழந்தைக்குக் கேட்கும் வண்ணம் அனுப்பப்பட்டது.

`நான் சுஜித் பேசுகிறேன்!' - குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தி.மலை கலெக்டர்

மறுபுறம் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் குழிதோண்டி குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. நேற்று மாலையிலிருந்து குழந்தையைக் காணவில்லை எனத் தேடிய போது, இரவு 9 மணியளவில்தான் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த விஷயமே தெரிய வந்திருக்கிறது.

இந்நிலையில் சற்று முன்னர் குழந்தை இறந்துவிட்டதாக மீட்புக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன்மூலம் 14 மணிநேரத்துக்கும் மேல் நீடித்த மீட்புப் பணி முடிவுக்கு வந்துள்ளது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.