Published:Updated:

அமெரிக்காவின் 'அணுசக்தி' கவலைகளை பரிசீலிப்போம்: ஒபாமாவிடம் மன்மோகன் உறுதி

Vikatan Correspondent
அமெரிக்காவின் 'அணுசக்தி' கவலைகளை பரிசீலிப்போம்: ஒபாமாவிடம் மன்மோகன் உறுதி
அமெரிக்காவின் 'அணுசக்தி' கவலைகளை பரிசீலிப்போம்: ஒபாமாவிடம் மன்மோகன் உறுதி
அமெரிக்காவின் 'அணுசக்தி' கவலைகளை பரிசீலிப்போம்: ஒபாமாவிடம் மன்மோகன் உறுதி

பாலி: அணு விபத்து இழப்பீடு விதிமுறைகள் தொடர்பான அமெரிக்காவின் கவலைகள், இந்திய சட்டத்துக்குட்பட்டு பரிசீலிக்கப்படும் என்று பராக் ஒபாமாவிடம் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.

இந்தோனேஷியாவின் பாலியில் தெற்காசிய கூட்டமைப்பான ஆசியான் மாநாடு நடைபெறுகிறது. இதில், பங்கேற்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது, அமெரிக்கா - இந்தியா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

அணு உலை விபத்து இழப்பீடு சட்டம்..

பின்னர் நிருபர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் அணு விபத்து இழப்பீடு சட்டம் தொடர்பாக அமெரிக்கா கொண்டுள்ள கவலைக்குரிய அம்சங்கள் தொடர்பாக, இந்திய சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலிக்கப்படும் என ஒபாமாவிடம் தாம் எடுத்துரைத்ததாக குறிப்பிட்டார்.

முன்னதாக, அணு விபத்து இழப்பீட்டு சட்டத்துக்கான விதிமுறைகளை மத்திய அரசு அறிவிக்கையாக புதன்கிழமை வெளியிட்டது. இதன் மூலம் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

பராக் ஒபாமாவை சந்திப்பதற்கு முன்பாக அமெரிக்கா வலியுறுத்தும் முக்கிய சட்டங்களில் ஒன்றான அணு விபத்து இழப்பீட்டு சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது இங்கே கவனத்துக்குரியது.


இரு நாட்டு நல்லுறவு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இந்தியா - அமெரிக்கா இடையே அதிர்ச்சி தரக்கூடிய எந்த விஷயமும் இல்லை என்ற பிரதமர், இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவது குறித்தும் பேசியதாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஒபாமா இந்தியப் பயணம் மேற்கொண்டதை நினைவுகூர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், இந்த ஓராண்டில் முதலீடு, வணிகம், உயர்கல்வி, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருவதாக கூறினார்.

இந்தியப் பயணத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா. இரு நாடுகளும் சேர்ந்து செயல்படுவதற்கான நல்லதொரு வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்தார்.

சீன அதிபருடன் சந்திப்பு..

இதேபோல், பாலியில் சீன அதிபர் வென் ஜியாபாவோவையும் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார்.

பின்னர், சீனாவுடன் நல்லுறவை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக குறிப்பிட்ட பிரதமர் மன்மோகன் சிங், இரு நாடுகளுக்கும் பயன் அளிக்கக்கூடிய வகையில் இணைந்து செயல்பட வாய்ப்பு இருப்பதாகவும், காலநிலை மாற்றம் குறித்து இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டபோது அதற்கு நல்ல பலன் கிடைத்ததாகவும் கூறினார்.