சென்னையிலிருந்து அரசுப் பேருந்து ஒன்று 50 பயணிகளுடன் சிதம்பரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இன்று காலை, செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, பேருந்துக்கு முன்னே இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது.

அந்த லாரியை முந்திச் செல்ல பேருந்து முற்பட்டபோது, எதிர்பாராத விதமாகப் பேருந்தின் இடது பக்கம் லாரியில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பயணிகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், செங்கல்பட்டு விபத்து தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ``செங்கல்பட்டு அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை அறிந்து வருந்துகிறேன். உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
இந்த விபத்து குறித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்த நபர்களுக்குச் சிறப்பான சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய், படுகாயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரமும் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
அதே போல தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் ட்விட்டர் பக்கத்தில், ``செங்கல்பட்டு அருகே நடந்த சாலை விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகத் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கிறார்" என்று பதிவிடப்பட்டிருக்கிறது.