Published:Updated:

அதிவேகத்தில் வந்த ஆட்டோ, லாரி - 6 பேரின் உயிரைப் பலிகொண்ட சாலை விபத்து

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆட்டோ மீது லாரி மோதியதில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோ விபத்து
ஆட்டோ விபத்து ( ஈ.ஜெ.நந்தகுமார் )

உசிலம்பட்டியிலிருந்து எழுமலைக்குச் சென்ற லாரியும், கோடாங்கிபட்டியிலிருந்து 13 பேரை ஏற்றிக்கொண்டு வந்த ஷேர் ஆட்டோவும் எருமார்பட்டி வளைவு அருகே வேகமாகச் சென்றதால் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே நான்கு பெண்கள் உட்பட 6 பேர் பலியானார்கள். 8 பேர் காயமடைந்தனர்.

ஆட்டோ விபத்து
ஆட்டோ விபத்து
ஈ.ஜெ.நந்தகுமார்

டிரைவர்களின் கட்டுப்பாடு இல்லாத வேகத்தாலும், பொறுப்பின்மையாலும் தீபாவளி கொண்டாடும் கனவில் இருந்த 6 பேர் பலியாகியுள்ளார்கள். இப்பகுதியில் அடிக்கடி ஷேர் ஆட்டோக்களால் விபத்து ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது என்கிறார்கள் மக்கள். சரியான அரசுப் பேருந்து வசதி இல்லாததால், இப்பகுதி கிராம மக்கள் ஷேர் ஆட்டோக்களையே நம்பியுள்ளார்கள்.

அதனால் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றுவது மட்டுமில்லாமல், அதிக வேகமாகச் செல்கிறார்கள். இதை காவல்துறையினர் எச்சரித்தாலும், ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டுகொள்வதில்லை என்று கூறப்படுகிறது. நேற்று நடந்த சம்பவத்திலும் கடும் வேகத்தில் ஆட்டோவும் லாரியும் வந்துள்ளன. மோதிய வேகத்தில் ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது.

ஆட்டோ விபத்து
ஆட்டோ விபத்து
ஈ.ஜெ.நந்தகுமார்

விபத்தில் பலியான கோடாங்கி நாயக்கன்பட்டி அசோக், ஜோதிநாயக்கனூர் முத்துலெட்சுமி, வாசியம்மாள், தாடையம்பட்டி சத்யா, கீழப்புதூர் குருவம்மாள், தும்மக்குண்டு முருகன் ஆகியோரின் உடல்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டன.

Vikatan

ஆசிரியை மாரியம்மாள், பள்ளி மாணவிகள் ஜோதில்நாயக்கனூர் தனுஷா, உட்பட நாகஜோதி, வசந்தா, அய்யர், ஆட்டோ டிரைவர் வினோத் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் ஒரு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

ஆட்டோ விபத்து
ஆட்டோ விபத்து
ஈ.ஜெ.நந்தகுமார்

தற்போது, லாரி டிரைவர் வீரபாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். உசிலம்பட்டி பகுதியில் மட்டுமல்ல, மதுரை மாவட்டம் முழுவதும் ஷேர் ஆட்டோக்களால் அதிக அளவில் விபத்துகள் ஏற்பட்டுவருவதாகவும், அவர்களைக் காவல்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.